குறள் (Kural) - 295

குறள் (Kural) 295
குறள் #295
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

பொருள்
உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.

Tamil Transliteration
Manaththotu Vaaimai Mozhiyin Thavaththotu
Thaananjey Vaarin Thalai.

மு.வரதராசனார்

ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.

சாலமன் பாப்பையா

உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.

கலைஞர்

உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.

பரிமேலழகர்

மனத்தொடு வாய்மை மொழியின் - ஒருவன் தன்மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின், தவத்தொடு தானம் செய்வாரின் தலை - அவன் தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையன். (மனத்தொடு பொருந்துதல் - மனத்திற்கு ஏறுதல். புறமாகிய மெய்யால் செய்யும் அவற்றினும் அகமாகிய மனம் மொழிகளால் செய்யும் அது பயனுடைத்து என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

மனத்தோடு வாய்மை மொழியின்- ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்த உண்மையைச் சொல்வானாயின்; தவத்தோடு தானம் செய்வாரின் தலை- அவன் தவமுந் தானமும் ஒருங்கே செய்தவரினுஞ் சிறந்தவனாவன். தவத்தோடு தானஞ் செய்வதினினும் உளத்தோடு பொருந்த உண்மை சொல்வது அரிதாதலால், "தவத்தோடு தானஞ் செய்வாரிற் றலை" என்றார்.

மணக்குடவர்

தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான். இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.

புலியூர்க் கேசிகன்

மனத்தோடு பொருந்திய வாய்மையையே ஒருவன் சொல்லி வருவானானால், அவன் தவத்தோடு தானமும் செய்பவரினும் மிகவும் சிறந்தவன் ஆவான்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)வாய்மை (Vaaimai)