குறள் (Kural) - 296

குறள் (Kural) 296
குறள் #296
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.

பொருள்
பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.

Tamil Transliteration
Poiyaamai Anna Pukazhillai Eyyaamai
Ellaa Aramun Tharum.

மு.வரதராசனார்

ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா

பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.

கலைஞர்

பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.

பரிமேலழகர்

பொய்யாமை அன்ன புகழ் இல்லை - ஒருவனுக்கு இம்மைக்குப் பொய்யாமையை ஒத்த புகழ்க் காரணம் இல்லை. எய்யாமை எல்லா அறமும் தரும் - மறுமைக்கு மெய் வருந்தாமல் அவனுக்கு எல்லா அறங்களையும தானே கொடுக்கும். ('புகழ்' ஈண்டு ஆகுபெயர். இல்லத்திற்குப் பொருள் கூட்டல் முதலியவற்றானும், துறவறத்திற்கு உண்ணாமை முதலியவற்றானும் வருந்தல் வேணடுமன்றே? அவ்வருத்தங்கள் புகுதாமல் அவ்விருவகைப் பயனையும் தானே தரும் என்பார், 'எய்யாமை எல்லா அறமும் தரும்' என்றார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பொய்யாமை அன்ன புகழில்லை- இம்மையில் ஒருவனுக்கு பொய்சொல்லாமை போன்ற புகழ்க் கரணகம் (காரணம்) வேறில்லை; எய்யாமை எல்லா அறமும் தரும் - உடம்பு வருந்தி எதுவுஞ் செய்யாமலே அது அவனுக்கு மறுமைக்கு வேண்டிய எல்லா அறங்களையுந் தரும். இல்லறத்திற் பொருளீட்டுதற்கும் துறவறத்தில் தவஞ் செய்தற்கும் உடம்பை வருத்தும் முயற்சி இன்றியமையாததாகும். அம் முயற்சி யின்றியே அவ்விருவினைப் பயனையுந் தருதலால் , "எய்யாமை யெல்லா வறமுந் தரும்" என்றார். 'புகழ்' ஆகு பெயர். எய்த்தல் உடம்பு வருந்தியிளைத்தல்.

மணக்குடவர்

பொய்யாமையை யுடையன் என்பதனோடு ஒத்த புகழ் வேறொன்றில்லை; பொய்யாமையானது அவனறியாமல் தானே எல்லா அறங்களையுங் கொடுக்குமாதலான்.

புலியூர்க் கேசிகன்

பொய்யாமை போலப் புகழ் தருவது ஏதும் இல்லை; அதில் தளராமல் உறுதியாயிருப்பது ஒருவனுக்கு எல்லா அறத்தின் சிறப்பையும் தரும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)வாய்மை (Vaaimai)