குறள் (Kural) - 294

குறள் (Kural) 294
குறள் #294
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.

பொருள்
மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.

Tamil Transliteration
Ullaththaar Poiyaa Thozhukin Ulakaththaar
Ullaththu Lellaam Ulan.

மு.வரதராசனார்

ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.

சாலமன் பாப்பையா

உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.

கலைஞர்

மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.

பரிமேலழகர்

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - ஒருவன் தன்னுள்ளத்திற்கேற்பப் பொய் கூறாது ஒழுகுவானாயின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - அவன் உயர்ந்தோர் உள்ளத்தின்கண் எல்லாம் உளனாம். ('உள்ளத்தால்' என்பது வேற்றுமை மயக்கம். பொய் கூறாது ஒழுகுதலாவது மெய் கூறி ஒழுகுதல் அவனது அறத்தினது அருமை நோக்கி உயர்ந்தோர் எப்பொழுதும் அவனையே நினைப்பர் என்பதாம். இதனான் இம்மைப்பயன் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்-ஒருவன் நெஞ்சாரப் பொய் சொல்லாது ஒழுகுவனாயின்; உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்-அவன் உயர்ந்தோ ருள்ளத்திலெல்லாம் உளனாவன். உயர்ந்தோர் உள்ளத்தில் உளனாதலாவது அவரால் மதிக்கப்படுதலும் என்றும் நினைக்கப்படுதலுமாம். 'உள்ளத்தான்' என்பது வேற்றுமை மயக்கம்.

மணக்குடவர்

தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான் இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது

புலியூர்க் கேசிகன்

உள்ளத்தால் பொய்யாது நடந்து வருவானாயின், அவன் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் இருப்பவன் ஆகும் சிறந்த உயர்வைப் பெறுவான்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)வாய்மை (Vaaimai)