குறள் (Kural) - 293

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
பொருள்
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.
Tamil Transliteration
Thannenj Charivadhu Poiyarka Poiththapin
Thannenje Thannaich Chutum.
மு.வரதராசனார்
ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
சாலமன் பாப்பையா
பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.
கலைஞர்
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.
பரிமேலழகர்
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க - ஒருவன் தன் நெஞ்சு அறிவது ஒன்றனைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யாதொழிக,பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் - பொய்த்த தாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும். (நெஞ்சு கரியாதல் "கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார் - தங்காது தகைவின்றித் தாம் செய்யும் வினைகளுள் - நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பவும் மறையாவாம் - நெஞ்சத்திற் குறுகிய கரி இல்லை ஆகலின்" (கலித்.நெய்தல்.8) என்பதனானும் அறிக. பொய் மறையாமையின், அது கூறலாகாது என்பது இதனான் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க- ஒருவன் தன் நெஞ்சு அறிந்த தொன்றைப் பிறர் அறியவில்லை யென்று கருதிப்பொய் சொல்லா தொழிக; பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச்சுடும்-பொய் சொன்னானாயின், அதனை யறிந்த தன் நெஞ்சே தான் செய்த தீவினைக்குச் சான்றாக நின்று தன்னைக் குற்றஞ் சாட்டித் துன்புறுத்தும். "நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை." (கொன்றை.54) முக்கரணவினைக ளெல்லாவற்றையும் நெஞ்சு அறிவதனாலேயே அதற்கு மனச்சான்று என்று பெயர். மனச்சான்று உடனிருந்துரைக்கவும் அதை மறுத்துப் பொய் சொல்வது கொடிய தென்பதை யுணர்த்தவே, "நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்." என்றார் உலகநாதர். 'சுடும்' என்றதினால், மனச்சான்று குத்தியுணர்த்தி மன நோவை யுண்டுபண்ணுவது மட்டுமன்றி, தெய்வச் சான்றாக நின்று வெளிப்படுத்தி அரசன் தண்டனையையும் அடைவிக்கும் என்பது பெறப்படும்.
மணக்குடவர்
தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான். இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.
புலியூர்க் கேசிகன்
ஒருவன், தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைப் பற்றிப் பொய்த்துப் பேசாதிருப்பானாக; அப்படி பொய்த்த பின்னர், அவன் நெஞ்சமே அவனைச் சுடும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | வாய்மை (Vaaimai) |