குறள் (Kural) - 290

குறள் (Kural) 290
குறள் #290
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.

பொருள்
களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.

Tamil Transliteration
Kalvaarkkuth Thallum Uyirnilai Kalvaarkkuth
Thallaadhu Puththe Lulaku.

மு.வரதராசனார்

களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.

சாலமன் பாப்பையா

திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.

கலைஞர்

களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.

பரிமேலழகர்

கள்வார்க்கு உயிர் நிலை தள்ளும் - களவினைப் பயில்வார்க்குத் தம்மின் வேறல்லாத உடம்பும் தவறும், கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது - அது செய்யாதார்க்கு நெடுஞ்சேணது ஆகிய புத்தேள் உலகும் தவறாது. (உயிர் நிற்றற்கு இடனாகலின், உயிர்நிலை எனப்பட்டது. சிறப்பு உம்மைகள் இரண்டும் விகாரத்தால் தொக்கன. இம்மையினும் அரசனால் ஒறுக்கப்படுதலின், 'உயிர் நிலையும் தள்ளும்' என்றும், மறுமையினும் தேவராதல் கூடுதலின் 'புத்தேள் உலகும் தள்ளாது' என்றும் கூறினார். 'மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து' (குறள்.566) என்புழியும் 'தள்ளுதல்' இப்பொருட்டாதல் அறிக. இதற்குப் பிறவாறு உரைப்பாரும் உளர். இதனான் இருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கள்வார்க்கு உயிர்நிலை தள்ளும்-களவு செய்வார்க்குத் தம்முடனேயே யுள்ள தம் சொந்த வுடம்பும் தவறும்; கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது-அது செய்யாதார்க்கு நெடுந் தொலைவிலுள்ள தேவருலகந் தவறாது கிட்டும். உயிர்நிற்பது உயிர்நிலை. தாம் குடியிருக்கும் வீடு போல்வது என்பதை யுணர்த்த 'உயிர்நிலை' யென்றார். உயிர்நிலை தள்ளுதலாவது அரசனால் தண்டிக்கப்படுதல். " கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்."(குறள்.550.) " கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று வெள்வேற் கொற்றங் காண்"(சிலப். 20 . 654.)

மணக்குடவர்

பிறர் பொருளைக் கள்வார்க்கு உயிர்நிலையாகிய வீடு பெறுதல் தப்பும். கள்ளா தார்க்குத் தேவருலகம் பெறுதல் தப்பாது. இது கள்வார் முத்தி பெறுதலுமிலர், கள்ளாதார் சுவர்க்கம் பெறாமையுமிலரென்றது.

புலியூர்க் கேசிகன்

களவு செய்வார்க்கு, உடலில் உயிர் நிலைக்கும் காலமும் தவறிப் போகும்; களவு செய்யாதவர்க்குத் தேவருலகத்து வாழ்வும் தவறிப் போகாது

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)கள்ளாமை (Kallaamai)