குறள் (Kural) - 289

குறள் (Kural) 289
குறள் #289
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

பொருள்
அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்.

Tamil Transliteration
Alavalla Seydhaange Veevar Kalavalla
Matraiya Thetraa Thavar.

மு.வரதராசனார்

களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.

சாலமன் பாப்பையா

அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.

கலைஞர்

அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்.

பரிமேலழகர்

அளவு அல்ல செய்தாங்கே வீவர் - அவ்வளவல்லாத தீய நினைவுகளை நினைத்த பொழுதே கெடுவர், அளவு அல்ல மற்றைய தேற்றாதவர் - களவு அல்லாத பிறவற்றை அறியாதவர். (தீய நினைவுகளாவன : பொருளுடையாரை வஞ்சிக்குமாறும், அவ்வஞ்சனையால் அது கொள்ளுமாறும், கொண்ட அதனால் தாம் புலன்களை நுகருமாறும் முதலாயின. நினைத்தலும் செய்தலாகலின், 'செய்து' என்றும், அஃது உள்ள அறங்களைப் போக்கி, கரந்த சொற் செயல்களைப் புகுவித்து அப்பொழுதே கெடுக்கும் ஆகலின் ஆங்கே வீவர்' என்றும் கூறினார். மற்றையாவன: துறந்தார்க்கு உணவாக ஓதப்பட்ட காய், கனி ,கிழங்கு சருகு முதலாயினவும், இல்வாழ்வார் செய்யும் தானங்களுமாம். தேற்றாமை: அவற்றையே நுகர்ந்து அவ்வளவால் நிறைந்திருத்தலை அறியாமை. இதனாற் கள்வார் கெடுமாறு கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

களவு அல்ல மற்றைய தேற்றாதவர்-களவல்லாத பிறவற்றை அறியாதவர்; அளவு அல்ல செய்து ஆங்கே வீவர்- வரம்பு கடந்த செயல்களைச் செய்து அப்பொழுதே அழிவர் . வரம்பு கடந்த செயல்கள் பெருங் களவுகள். அப்பொழுதே அழிதல், கையும் மெய்யுமாகக் கண்டுபிடிக்கப்பட்டு அரசனாலும் மக்களாலும் தண்டனை யடைதலும் எரியுலகில் வீழ்தலும். தேற்றாதவர் என்பது தன்வினைப் பொருளில் வந்த பிறவினைச்சொல்.

மணக்குடவர்

நேர் ஆகாதன செய்து அவ்விடத்தே கெடுவார்; களவல்லாத மற்றைய அறங்களைத் தெளியாதவர். இது கள்வாரை அரசர் கொல்வரென்றது.

புலியூர்க் கேசிகன்

களவு அல்லாத, பிற நல்ல முயற்சிகளைச் செய்து பொருள் தேடி வாழ்தலைத் தெளியாதவர்கள், அளவு கடந்த செலவுகளைச் செய்து அக்களவாலேயே அழிவர்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)கள்ளாமை (Kallaamai)