குறள் (Kural) - 291

குறள் (Kural) 291
குறள் #291
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

பொருள்
பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.

Tamil Transliteration
Vaaimai Enappatuvadhu Yaadhenin Yaadhondrum
Theemai Ilaadha Solal.

மு.வரதராசனார்

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

சாலமன் பாப்பையா

உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.

கலைஞர்

பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.

பரிமேலழகர்

வாய்மை எனப்படுவது யாது எனின் - மெய்ம்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்று வினவின், தீமை யாதொன்றும் இலாத சொலல் - அது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல். ('தீமை யாதொன்றும் இலாத' என இயையும். 'எனப்படுவது' என்பது 'ஊர் எனப்படுவது உறையூர்' என்றாற் போல நின்றது. இதனான் நிகழ்ந்தது கூறல் என்பது நீக்கப்பட்டது. அது தானும், தீங்கு பயவாதாயின் மெய்ம்மையாம் : பயப்பின் பொய்ம்மையாம் என்பது கருத்து.)

ஞா.தேவநேயப் பாவாணர்

வாய்மை எனப்படுவது யாது எனின்-மெய்ம்மையென்று சொல்லப்படுவது யாதென்று வினவின் ; தீமை யாது ஒன்றும் இலாத சொலல்-அது எவ்வகை யுயிர்க்கும் எவ்வகைத் தீங்கும் எட்டுணையும் விளைக்காத சொற்களைச் சொல்லுதலாம். வாய்மையின் இலக்கணம் பிறர்க்கும் பிற வுயிர்கட்கும் தீங்கு பயவாமையே யன்றி நிகழ்ந்தது கூறலன்று என்பது கருத்து. இது திருக்குறளை ஒப்புயர்வற்ற உலக அற நூலாக்கும் இயல்வரையறையாம். உண்மை, வாய்மை, மெய்ம்மை என்னும் ஒரு பொருட்சொல் மூன்றும், முறையே, உள்ளமும் வாயும் உடம்புமாகிய முக்கரணத்தொடு தொடர்புடையனவாகச் சொல்லப்பெறும். இனி, உள்ளது உண்மை, வாய்ப்பது வாய்மை, மெய் (substance) போன்றது மெய்ம்மை எனினுமாம்.

மணக்குடவர்

பொய் சொல்லாத மெய்யென்று சொல்லப்படுவது யாதென்று வினவின், பிறர்க்கு யாதொன்றானும் தீமை பயவாத சொற்களைச் சொல்லுதல், வாய்மை யாது என்றார்க்கு இது கூறப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

‘வாய்மை’ என்று சொல்லப்படுவது யாது என்றால், அது பிறருக்குத் தீமை இல்லாதபடி யாதொரு சொல்லையும் எப்போதும் சொல்லுதல் ஆகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)வாய்மை (Vaaimai)