குறள் (Kural) - 288
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
பொருள்
நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.
Tamil Transliteration
Alavarindhaar Nenjath Tharampola Nirkum
Kalavarindhaar Nenjil Karavu.
மு.வரதராசனார்
அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.
சாலமன் பாப்பையா
உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்.
கலைஞர்
நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.
பரிமேலழகர்
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் - அவ்வளத்தலையே பயின்றவர் நெஞ்சத்து அறம் நிலை பெற்றாற்போல நிலைபெறும், களவு அறிந்தார் நெஞ்சில் கரவு - களவையே பயின்றவர் நெஞ்சத்து வஞ்சனை. (உயிர் முதலியவற்றை அளந்தறிந்தார்க்குத் துறவறம் சலியாது நிற்கும் என்பது இவ்வுவமையால் பெற்றாம். களவோடு மாறின்றி நிற்பது இதனால் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல - பொருள்களின் இயல்பை உள்ளவாறறிந்தவரின் உள்ளத்தில் அறம் நிலைத்து நிற்றல்போல; களவு அறிந்தார் நெஞ்சில் கரவு நிற்கும்-களவையே பயின்றவரின் உள்ளத்தில் வஞ்சனை நிலைத்து நிற்கும். பழக்கம் நிலைத்து நிற்கும் இயல்பினதென்பதும், பொருள்களின் இயல்பை அளந்தறிதல் துறவறத்திற்கு இன்றியமையாத தென்பதும், இங்குக் கூறப்பட்டன.
மணக்குடவர்
நேரறிந்தவர் நெஞ்சத்து அறம் நிற்குமாறுபோல நிற்கும்: களவறிந்தவர் நெஞ்சில் வஞ்சகமும். இது களவு காண்பாரைப் பின்பு களவினின்று தவிர்த்தல் முடியாதென்றது.
புலியூர்க் கேசிகன்
அளவறிந்து வாழ்தலை அறிந்தவரின் நெஞ்சத்திலே ‘அறம்’ நிற்பது போல, களவுத்தொழிலை அறிந்தவரின் நெஞ்சிலே ‘வஞ்சகம்’ எப்போதும் நிலைத்திருக்கும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | கள்ளாமை (Kallaamai) |