குறள் (Kural) - 287

குறள் (Kural) 287
குறள் #287
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.

பொருள்
அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது.

Tamil Transliteration
Kalavennum Kaarari Vaanmai Alavennum
Aatral Purindhaarkanta Il.

மு.வரதராசனார்

களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.

சாலமன் பாப்பையா

உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.

கலைஞர்

அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது.

பரிமேலழகர்

களவு என்னும் கார் அறிவு ஆண்மை - களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல்; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் - உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை. (இருள் - மயக்கம். காரியத்தைக் காரணமாக உபசரித்துக் 'களவென்னும் கார் அறிவு ஆண்மை' என்றும், காரணத்தைக் காரியமாக்கி 'அளவு என்னும் ஆற்றல்' என்றும் கூறினார். களவும் துறவும், இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறாகலின், ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

களவு என்னும் கார் அறிவு ஆண்மை-களவாண்மை என்று சொல்லப்படும் இருண்ட அறிவுடைமை ; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல்-எல்லாப் பொருள்களின் இயல்பையும் உள்ளவாறு அளந்தறியுந் திறமையை விரும்பினவரிடத்து இல்லை. இருள் என்பது அகவிருளாகிய மயக்கம். புறவிருளின் கருமை இனம் பற்றி அகவிருட்கும் ஏற்றப்பட்டது. களவையுந் திறம்படச் செய்வதற்கு அறிவு வேண்டியிருப்பதால், அத்தீய அறிவு காரறிவெனப்பட்டது. 'என்னும்' என்பது ஈரிடத்தும் 'ஆகிய' என்னும் பொருளது. ஒளியுடன் இருள்பொருந்தாததுபோலத் துறவறத்திற்குரிய தூய அறிவொடு தீய அறிவு பொருந்தாது என்பது கருத்து.

மணக்குடவர்

களவாகிய பொல்லா அறிவுடைமை நேராகிய பெருமையைப் பொருந்தினார்மாட்டு இல்லை. இது நேரறிந்தவர் களவு காணாரென்றது.

புலியூர்க் கேசிகன்

‘களவு’ எனப்படும் இருள்படர்ந்த அறிவாண்மையானது, அளவறிந்து வாழும் ஆற்றலை விரும்பிய நன்மக்களிடத்திலே ஒருபோதும் இல்லை யாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)கள்ளாமை (Kallaamai)