குறள் (Kural) - 286

குறள் (Kural) 286
குறள் #286
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

பொருள்
ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்.

Tamil Transliteration
Alavinkan Nindrozhukal Aatraar Kalavinkan
Kandriya Kaadha Lavar.

மு.வரதராசனார்

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.

சாலமன் பாப்பையா

உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.

கலைஞர்

ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்.

பரிமேலழகர்

அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார் - உயிர் முதலியவற்றை அளத்தலாகிய நெறியின்கண் நின்று அதற்கு ஏற்ப ஒழுகமாட்டார், களவின்கண் கன்றிய காதலவர் - களவின் கண்ணே மிக்க வேட்கையை உடையார். (உயிர் முதலியவற்றை அளத்தலாவது, காட்சி முதலாகச் சொல்லப்பட்ட அளவைகளான் உயிர்ப் பொருளையும், அதற்கு அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக்கு உற்ற விளைவுகளையும் அவற்றான் அது நாற்கதியுள் பிறந்து இறந்து வருதலையும், அது செய்யாமல் அவற்றைக் கெடுத்தற்கு உபாயமாகிய யோகஞானங்களையும், அவற்றான் அஃது எய்தும் வீட்டினையும் அளந்து உள்ளவாறு அறிதல். இதனை ஆருகதர் தருமத்தியானம் என்ப. அதற்கு ஏற்ப ஒழுகுதலாவது, அவ்வளக்கப்பட்டனவற்றுள் தீயனவற்றின் நீங்கி நல்லனவற்றின் வழி நிற்றல்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

களவின்கண் கன்றிய காதலவர்-களவின்கண் ஊன்றிய வேட்கை யுடையவர் ; அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார்-தமக்குரிய ஒழுக்க வரம்பின்கண் நின்று ஒழுக மாட்டார். அளவைகளால் உயிர்க்கு வரும் இன்பதுன்பக் கூறுகளை ஆராய்ந்தறிதல் மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்திற்கே சிறப்பாக ஏற்குமாதலின், அறவூழ்கம் (தருமத்தியானம்) என்னும் ஆருகத மதக் கொள்கையைப் பரிமேலழகர் இங்குப் புகுத்துவது பொருந்தாது.

மணக்குடவர்

களவின்கண்ணே மிக்க ஆசையையுடையவர் நேரின்கணின்று ஒழுகுதலைச் செய்யமாட்டார். இது நேர் செய்ய மாட்டாரென்றது.

புலியூர்க் கேசிகன்

களவுநெறியின் கண் மிக முதிர்ந்த ஆசையுடையவர்கள் எல்லாரும், தம் வருவாயின் அளவுக்குத் தகுந்தபடி ஒழுக்கத்தோடு வாழ இயலாதவர்களே

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)கள்ளாமை (Kallaamai)