குறள் (Kural) - 285

குறள் (Kural) 285
குறள் #285
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

பொருள்
மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.

Tamil Transliteration
Arulkarudhi Anputaiya Raadhal Porulkarudhip
Pochchaappup Paarppaarkan Il.

மு.வரதராசனார்

அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.

சாலமன் பாப்பையா

அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது.

கலைஞர்

மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.

பரிமேலழகர்

அருள் கருதி அன்பு உடையர் ஆதல் - அருளினது உயர்ச்சியை அறிந்து அதன்மேல் அன்புடையராய் ஒழுகுதல், பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பார்மாட்டு உண்டாகாது. (தமக்கு உரிய பொருளையும் அதனது குற்றம் நோக்கித் துறந்து போந்தவர், பின் பிறர்க்கு உரிய பொருளை நன்கு மதித்து, அதனை வஞ்சித்துக் கோடற்கு அவரது சோர்வு பார்க்கும் மருட்சியரானால், அவர்மாட்டு, உயிர்கள்மேல் அருள் செய்தல் நமக்கு உறுதி என்று அறிந்து அவ்வருளின் வழுவாது ஒழுகும் தெருட்சிகூடாது என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அருள் கருதி அன்பு உடையர் ஆதல் - அருளின் அருமை நோக்கிப் பிறரிடத்து அன்புடையரா யொழுதல்; பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்-பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பாரிடத்தில் உண்டாகாது. தம் சொந்தப் பொருளைத் தீதென்று விட்டுவிட்டுத் துறவு பூண்டோர், பின்பு மீண்டும் பொருளாசை கொண்டு பிறர் பொருளைக்கவரச் சமையம் பார்ப்பாராயின், நீங்கின நோயின் மறுதாக்கு முன்னினும் வலிதாயிருத்தல்போல அவராசையும் வலிதாயிருக்குமாதலின், அவர் கவரக் கருதும் பொருளுடையார் மீது அவர்க்கு அருளோ அன்போ பிறவாதென்பது கருத்து.

மணக்குடவர்

அருளைக் குறித்து உயிர்மீது அன்புடையரா யொழுகுதல் பொருளை குறித்துப் பிறரது மறவியைப் பார்ப்பார் மாட்டு இல்லை. இஃது அருளும் அன்பு மில்லையாமென்றது.

புலியூர்க் கேசிகன்

பொருள் தேடுதலையே நினைத்துப் பிறர் சோர்ந்திருக்கும் காலத்தைப் பார்க்கும் கள்வரிடத்தே, அருளைக் கருதி அன்புடையவராதல், சான்றோரிடமும் இல்லை

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)கள்ளாமை (Kallaamai)