குறள் (Kural) - 284

குறள் (Kural) 284
குறள் #284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

பொருள்
களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.

Tamil Transliteration
Kalavinkan Kandriya Kaadhal Vilaivinkan
Veeyaa Vizhumam Tharum.

மு.வரதராசனார்

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

சாலமன் பாப்பையா

அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

கலைஞர்

களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.

பரிமேலழகர்

களவின்கண் கன்றிய காதல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை, விளைவின்கண் வீயாவிழுமம் தரும்- அப்பொழுது இனிதுபோலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும். (கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின் வீயா விழுமம் தரும் என்றார். இவை இரண்டு பாட்டானும் அது கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

களவின்கண் கன்றிய காதல் - பிறர் பொருளைக் கவர்தலின்கண் ஊன்றிய வேட்கை ; விளைவின்கண் வீயா விழுமம் தரும் - அற்றைக்கு நலஞ் செய்வதுபோல் தோன்றிப் பின்பு பயன் விளையுங் காலத்தில் தீராத துன்பத்தை யுண்டாக்கும். களவாசை வேரூன்றியதினால் மேன்மேலுங் களவிற் பயிற்றி, அதனால் இம்மைக்கும் மறுமைக்கும் தீராத பழியும் தீவினையும் விளைக்குமாதலின், 'வீயா விழுமந் தரும்' என்றார்.

மணக்குடவர்

களவின்கண்ணே மிக்கஆசை, பயன்படுங் காலத்துக் கேடில்லாத நோயைத் தரும். இது நரகம் புகுத்தும் என்றது.

புலியூர்க் கேசிகன்

களவு செய்வதிலே உண்டாகும் முதிர்ந்த விருப்பமானது, அதனால் வரும் விளைவுகளின் போது தீராத துன்பத்தைத் தருவதாகவே விளங்கும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)கள்ளாமை (Kallaamai)