குறள் (Kural) - 283

குறள் (Kural) 283
குறள் #283
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.

பொருள்
கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்.

Tamil Transliteration
Kalavinaal Aakiya Aakkam Alavirandhu
Aavadhu Polak Ketum.

மு.வரதராசனார்

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.

சாலமன் பாப்பையா

திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.

கலைஞர்

கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்.

பரிமேலழகர்

களவினால் ஆகிய ஆக்கம் - களவினால் உளதாகிய பொருள், ஆவது போல அளவிறந்து கெடும் - வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும். (ஆக்கத்திற்கு ஏதுவாகலின் 'ஆக்கம்' எனப்பட்டது. எல்லையைக் கடந்து கெடுதலாவது, தான் போங்கால் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன்கொண்டு போதல். 'அளவு அறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும்' என்று உரைப்பாரும் உளர்.

ஞா.தேவநேயப் பாவாணர்

களவினால் ஆகிய ஆக்கம் -கனவினால் உண்டான செல்வம் ; ஆவது போல அளவு இறந்து கெடும் - வளர்வது போலத் தோன்றி அளவு கடந்து கெடும். 'ஆக்கம்' தொழிலாகு பெயர். அளவிறந்து கெடுதலாவது, புது வெள்ளம் பழைய வெள்ளத்தை அடித்துக் கொண்டு போவது போல், தான் போகும்போது முன்பிருந்த பழஞ் செல்வத்தையும் தன்னொடு சேர்த்துக் கொண்டு போதலும் , இம்மைக்குப் பழியையும் மறுமைக்குத் தீவினையையும் உண்டாக்குதலுமாம்.

மணக்குடவர்

களவிற் கொண்ட பொருளா லாகிய ஆக்கம் மேன் மேலும் மிகுவதுபோலக் கெடும். இது பொருள் நிலையாதென்றது.

புலியூர்க் கேசிகன்

களவாலே வந்தடையும் செல்வமானது அளவு கடந்து பெருகுவது போலவே, எதிர்பாராமல், எல்லாம் வந்தது போல, விரைந்து ஒழிந்தும் போய்விடும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)கள்ளாமை (Kallaamai)