குறள் (Kural) - 282
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
பொருள்
பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்.
Tamil Transliteration
Ullaththaal Ullalum Theedhe Piranporulaik
Kallaththaal Kalvem Enal.
மு.வரதராசனார்
குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா
அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.
கலைஞர்
பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்.
பரிமேலழகர்
உள்ளத்தால் உள்ளலும் தீதே - குற்றங்களைத் தம் நெஞ்சால் கருதுதலும் துறந்தார்க்குப் பாவம், பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் - ஆதலால், பிறனொருவன் பொருளை அவன் அறியா வகையால் வஞ்சித்துக் கொள்வோம் என்று கருதற்க. ('உள்ளத்தால்' என வேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையோர் உள்ளம் போலாது சிறப்புடைத்து என்பது முடித்தற்கு. உள்ளலும் என்பது இழிவு சிறப்பு உம்மை. 'அல்' விகுதி வியங்கோள் 'எதிர்மறைக்கண்' வந்தது. இவை இரண்டு பாட்டானும் இந்நடைக்குக் களவாவது இஃது என்பதூஉம் அது கடியப்படுவது என்பதூஉம் கூறப்பட்டன.)
ஞா.தேவநேயப் பாவாணர்
உள்ளத்தால் உள்ளலும் தீதே - தீவினைகளைத் தம் நெஞ்சாற் கருதுதலும் துறவறத்தார்க்குக் குற்றமாம் ; பிறன் பொருளைக் கள்ளத்தாற் கள்வேம் எனல் - ஆதலால் , பிறன் பொருள் எதையேனும் அவனறியாமற் கவர்வேம் என்று கருதற்க. 'உள்ளத்தால்' என்னும் வேண்டாச் சொல் துறவியரின் உள்ளம் தூய்மையாயிருக்க வேண்டும் என்பதை உணர்த்தி நின்றது. ' உள்ளலும்' இழிவு சிறப்பும்மை. 'அல்' இங்கு எதிர்மறை வியங்கோளீறு. இனி, கள்வேமெனல் உள்ளலுந்தீதே எனினுமாம்.
மணக்குடவர்
பிறன் பொருளை நெஞ்சினால் நினைத்தலும் தீதாம்; ஆதலால் அதனை மறைவினாலே கள்வேமென்று முயலாதொழிக. இது களவு தீதென்றது.
புலியூர்க் கேசிகன்
‘பிறன் பொருளைக் கள்ளமாகக் களவாடிக் கொள்வோம்’ என்று ஒருவன், தன் உள்ளத்தால் நினைத்தாலும் அந்த நினைவு கூடத் தீமையானதே
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | கள்ளாமை (Kallaamai) |