குறள் (Kural) - 281
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
பொருள்
எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்.
Tamil Transliteration
Ellaamai Ventuvaan Enpaan Enaiththondrum
Kallaamai Kaakkadhan Nenju.
மு.வரதராசனார்
பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா
அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.
கலைஞர்
எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்.
பரிமேலழகர்
எள்ளாமை வேண்டுவான் என்பான் - வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான், எனைத்து ஒன்று கள்ளாமை தன் நெஞ்சு காக்க - யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக்கொள்ளக் கருதாவகை தன் நெஞ்சினைக் காக்க. ('எள்ளாது' என்னும் எதிர்மறை வினையெச்சம் எள்ளாமை எனத் திரிந்து நின்றது. வீட்டினை இகழ்தலாவது காட்சியே அளவையாவது என்றும்,நிலம், நீர், தீ, வளி எனப் பூதம் நான்கே என்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றி, பிரிவால் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின் கண் களிப்புப் போல வெளிப்பட்டு அழியும் என்றும், இறந்த உயிர் பின் பிறவாது என்றும், இன்பமும் பொருளும் ஒருவனால் செய்யப்படுவன என்றும் சொல்லும் உலோகாயதம் முதலிய மயக்க நூல்களைத் தெளிந்து, அவற்றிற்கு ஏற்ப ஒழுகுதல். ஞானத்திற்கு ஏதுவாய மெய்ந்நூற்பொருளையேனும், ஆசிரியனை வழிபட்டன்றி அவனை வஞ்சித்துக்கொள்ளின் அதுவும் களவாம் ஆகலின், 'எனைத்து ஒன்றும்' என்றார். 'நெஞ்சு கள்ளாமல் காக்க' எனவே, துறந்தார்க்கு விலக்கப்பட்ட கள்ளுதல் கள்ளக் கருதுதல் என்பது பெற்றாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
எள்ளாமை வேண்டுவான் என்பான் - கள்வன் என்று பிறரால் இழித்தெண்ணப் படாமையை விரும்புகின்றவன் என்று சொல்லப்படுவான் ; தன் நெஞ்சு எனைத்து ஒன்றும் கள்ளாமை காக்க -தன்மனம் எவ்வகைப் பொருளையும் மறைவிற் கவரக் கருதாவகை காத்துக்கொள்க. அறிவு போன்ற கருத்துப் பொருளும் அடங்க 'யாதொன்றும் என்றார். நெஞ்சு கள்ளாமை காக்க என்றதனால் , கள்ளுதல் இங்குக் கள்ளக் கருதுதல் என்பது பெறப்படும். என்பான் என்னும் செய்வினை வடிவுச் சொல் செயப்பாட்டுவினைப் பொருள் கொண்டது.
மணக்குடவர்
பிறரா லிகழப்படாமையை வேண்டுவா னிவனென்று சொல்லப்படுமவன் யாதொரு பொருளையுங் களவிற் கொள்ளாமல் தன்னெஞ்சைக் காக்க. இது களவு ஆகாதென்றது.
புலியூர்க் கேசிகன்
உலகினரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன் எத்தகைய பொருளையும் களவாடிக் கொள்ள நினையாதபடி தன் மனத்தை முதலில் காத்தல் வேண்டும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | கள்ளாமை (Kallaamai) |