குறள் (Kural) - 280

குறள் (Kural) 280
குறள் #280
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

பொருள்
உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்.

Tamil Transliteration
Mazhiththalum Neettalum Ventaa Ulakam
Pazhiththadhu Ozhiththu Vitin.

மு.வரதராசனார்

உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.

சாலமன் பாப்பையா

உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா.

கலைஞர்

உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்.

பரிமேலழகர்

மழித்தலும் நீட்டலும் வேண்டா - தவம் செய்வோர்க்கு தலை மயிரை மழித்தலும் சடையாக்கலும் ஆகிய வேடமும் வேண்டா. உலகம் பழித்தது ஒழித்து விடின் - உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்து விடின். (பறித்தலும் மழித்தலுள் அடங்கும், மழித்தல் என்பதே தலைமயிரை உணர்த்தலின் அது கூறார் ஆயினார். இதனால் கூடா ஒழுக்கம் இல்லாதார்க்கு வேடமும் வேண்டா என அவரது சிறப்புக் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

உலகம் பழித்தது ஒழித்து விடின் - உயர்ந்தோர் தவத்திற்காகாதென்று தள்ளிய ஒழுக்கத்தை விட்டுவிடின்; மழித்தலும் நீட்டலும் வேண்டா - தலைமயிரை வறண்டலும் சடையாக்கலும் வேண்டியதில்லை. சமணர் கையாளும் பறித்தல் முறையும் மழித்தலுள் அடங்கும். மழித்தல் என்னும் வினையினால் தலைமயிர் என்னும் செயப்படுபொருள் உணரப்படும். "மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன் ஆகுல நீர பிற". என்றதற் கேற்ப , கூடா வொழுக்க மில்லார்க்கு எவ்வகைப் புறக்கோலமும் வேண்டியதில்லை யென்பது இக்குறளாற் கூறப்பட்டது.

மணக்குடவர்

தவத்தினர்க்குத் தலையை மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகத்தார் கடிந்தவையிற்றைத் தாமுங்கடிந்து விடுவாராயின். இது வேடத்தாற் பயனில்லை: நல்லொழுக்கமே வேண்டுமென்றது.

புலியூர்க் கேசிகன்

உலகம் பழித்த தீயசெயல்களை ஒழித்துவிட்டால் உயர்வுதானே வரும்; உயர்வு கருதி மயிரை மழித்துக் கொள்ளலும் நீள வளர்த்தலும் செய்ய வேண்டாம்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)கூடா ஒழுக்கம் (Kootaavozhukkam)