குறள் (Kural) - 253

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
பொருள்
படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல.
Tamil Transliteration
Pataikontaar Nenjampol Nannookkaadhu Ondran
Utalsuvai Untaar Manam.
மு.வரதராசனார்
ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.
சாலமன் பாப்பையா
கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.
கலைஞர்
டைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல.
பரிமேலழகர்
படை கொண்டார் நெஞ்சம் போல் - கொலைக் கருவியை தம் கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யும் கொலையையே நோக்குவதல்லது அருளை நோக்காதவாறு போல, ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் நன்று ஊக்காது - பிறி்தோர் உயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ்வூனையே நோக்குவது அல்லது அருளை நோக்காது. (சுவைபட உண்டல், காயங்களான் இனிய சுவைத்து ஆக்கி உண்டல். இதனான் ஊன் தின்றார் மனம் தீங்கு நினைத்தல் உவம அளவையால் சாதித்து, மேலது வலியுறுத்தப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
படை கொண்டார் நெஞ்சம் போல்-பகைவரைக் கொல்வதற்குக் கொலைக்கருவியைக் கையிற் கொண்டவரின் மனம் அதனாற் செய்யுங் கொலையை யன்றி அருளை நோக்காதது போல; ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் நன்று ஊக்காது-ஓர் உயிரியின் உடலைச் சுவையாக வுண்டவர் மனம் அவ்வூனையன்றி அருளை நோக்காது. ஊன் சுவையாயிருத்தல் காயச் சரக்கை மட்டுமன்றி உயிரியின் இனத்தையும் பொறுத்ததாம். ஊனுண்பார்க்கு அருளின்மை உவமை வாயிலாகவுங் காட்டப்பட்டது. கதறினும் தொண்டை கீளக் கத்தினும் புள்ளும் மாவும் பதறினும் நெஞ்சமெல்லாம் பக்கமுந் தலையுங் காலும் உதறினும் அங்குமிங்கும் ஓடினும் அரத்தம் பீறிச் சிதறினும் இரக்கங்கொள்ளார் சிதைத்துடல் சுவைக்க வுண்டார். என்னும் செய்யுள் இங்கு நினைவுகூரத்தக்கது.
மணக்குடவர்
ஆயுதம் கையிற்கொண்டவர் நெஞ்சுபோல் நன்மையை நினையாது: ஒன்றினுடலைச் சுவைபடவுண்டார் மனம்.
புலியூர்க் கேசிகன்
ஒன்றன் உடலைச் சுவையாக உண்டவரது மனம், கொலைக் கருவியை ஏந்தினவரது நெஞ்சத்தைப் போலப் பிறவுயிருக்கு அருள் செய்தலைப் பற்றியே நினையாது
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | புலால் மறுத்தல் (Pulaanmaruththal) |