குறள் (Kural) - 252
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
பொருள்
பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை.
Tamil Transliteration
Porulaatchi Potraadhaarkku Illai Arulaatchi
Aangillai Oondhin Pavarkku.
மு.வரதராசனார்
பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.
சாலமன் பாப்பையா
பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.
கலைஞர்
பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை.
பரிமேலழகர்
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை - பொருளால் பயன் கோடல் அதனைப் பாதுகாவாதார்க்கு இல்லை, ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்களுக்கு இல்லை - அது போல அருளால் பயன் கோடல் ஊன் தின்பவர்களுக்கு இல்லை. (பொருட்பயன் இழத்தற்குக் காரணம் காவாமை போல, அருட்பயன் இழத்தற்கு ஊன் தின்னல் காரணம் என்பதாயிற்று. ஊன் தின்றாராயினும் உயிர்கட்கு ஒரு தீங்கும் நினையாதார்க்கு அருள் ஆள்தற்கு இழுக்கு இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவை இரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை-பொருளைக் கையாளுதல் அதைப் பாதுகாவாதார்க்கு இல்லை; ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்க்கு இல்லை-அதுபோல அருளைக்கையாளுதல் ஊன் உண்பவர்க்கு இல்லை. ஊனுண்பவர்க்கு அருளில்லை யென்பது இங்கு முடிந்த முடிபாகக் கூறப்பட்டது. இம் முடிவிற்கு முந்தின குறள் ஏதுவாம்.
மணக்குடவர்
பொருளினை யாளுதல் அதனைக் காக்கமாட்டாதார்க்கு இல்லை. அதுபோல அருளினை யாளுதல் ஊன் தின்பவர்க்கு இல்லை. இஃது ஊனுண்ண அருட்கேடு வருமென்றது
புலியூர்க் கேசிகன்
பொருள் உடையவராக இருக்கும் தகுதி அப்பொருளைக் காப்பாற்றாதவர்க்கு இல்லை; அவ்வாறே, அருள் உடையவர் ஆகும் தகுதி ஊனைத் தின்பவர்க்கும் இல்லை
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | புலால் மறுத்தல் (Pulaanmaruththal) |