குறள் (Kural) - 249

குறள் (Kural) 249
குறள் #249
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.

பொருள்
அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்.

Tamil Transliteration
Therulaadhaan Meypporul Kantatraal Therin
Arulaadhaan Seyyum Aram.

மு.வரதராசனார்

அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.

சாலமன் பாப்பையா

மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.

கலைஞர்

அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்.

பரிமேலழகர்

அருளாதான் செய்யும் அறம் தேரின் - உயிர்கள் மாட்டு அருள் செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின், தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்று - ஞானம் இல்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும். (மெய்ப்பொருள் - மெய்ந்நூலில் சொல்லும் பொருள். நிலை பெற்ற ஞானம் இல்லாதவன் இடையே மெய்ப்பொருளை உணர்ந்தால் அதனைத் தன்ஞானம் இலாமையால் தானே அழித்துவிடும் : அது போல அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன் அருளாமையால் தானே அழித்து விடும் என்பது ஆயிற்று: ஆகவே, பிற அறங்கட்கெல்லாம் அருள் உடைமை மூலம் என்பது பெற்றாம். இவை நான்கு பாட்டானும் அத்துணை இல்லாதார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அருளாதான் செய்யும் அறம் தேரின்-உயிர்களிடத்து அருள் செய்யாதவன் செய்யும் அறத்தின் தன்மையை ஆராயின்; தெருளாதான் மெய்ப்பொருள் கண்ட அற்று-தெளிந்த அறிவில்லாதவன் மெய்ப்பொருள் உணர்ந்தாற்போலும். தெளிந்த அறிவில்லாதவன் மெய்ப்பொருளுணர முடியாது, அதுபோல் அருளில்லாதவன் அறஞ் செய்ய முடியாது என்பது கருத்து. மெய்ப்பொருள் (தத்துவம்) என்பது. என்றும் நுண்வடி வாகவேனும் பருவடிவாகவேனும் மறைந்தோ வெளிப்பட்டோ அழியாதிருக்கும் தனிப் பொருள் அல்லது அத்தகைய பொருட்டொகுதி. இல்லறங்கட்கு அன்பு போல் துறவறங்கட்கு அருள் மூலம் என்பது கூறப்பட்டது. 'ஆல்' அசைநிலை.

மணக்குடவர்

தெளிவில்லாதான் மெய்ப்பொருளைத் தெளிந்தாற்போலும்: ஆராயின்அருளில்லாதான் செய்யும் அறமும். இஃது அறஞ் செய்யவும் மாட்டாரென்றது.

புலியூர்க் கேசிகன்

அருள் இல்லாதவன் செய்யும் தருமத்தை ஆராய்ந்தால், தெளிவில்லாதவன் மெய்ந்நூலிற் கூறப்பெற்ற உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றதே!

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)அருளுடைமை (Arulutaimai)