குறள் (Kural) - 250

குறள் (Kural) 250
குறள் #250
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.

பொருள்
தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.

Tamil Transliteration
Valiyaarmun Thannai Ninaikka Thaan Thannin
Meliyaarmel Sellu Mitaththu.

மு.வரதராசனார்

(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா

அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க.

கலைஞர்

தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.

பரிமேலழகர்

வலியார் முன் தன்னை நினைக்க - தன்னின் வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர்முன் தான் அஞ்சிநிற்கும் நிலையினை நினைக்க, தான் தன்னின்மெலியார்மேல் செல்லுமிடத்து - அருளில்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் நலியச் செல்லும் பொழுது. ('மெலியார்' எனச் சிறப்புடைய உயர்திணைமேல் கூறினாராயினும், ஏனைய அஃறிணையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, இவ்வுயிர்க்கும் அவ்வாறே அச்சம் ஆம் என்று அறிந்து, அதன்மேல் அருள் உடையன் ஆம் என்பது கருத்து. இதனால் அருள் பிறத்தற்கு உபாயம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தான் தன்னின் மெலியார்மேல் செல்லுமிடத்து-ஒருவன் அருளில்லாமையால் தன்னினும் எளியவரை வருத்துமாறு அவர்மேற் செல்லும் பொழுது; வலியார் முன் தன்னை நினைக்க-தன்னினும் வலியவர் தன்னை வருத்தவரும்போது தான் அவர் முன் அஞ்சி நிற்கும் நிலையை நினைக்க. தலைமை பற்றி 'வலியார்' 'மெலியார்' என உயர்திணை மேல்வைத்துக் கூறியது அஃறிணையையுந் தழுவும். தன்குற்றந் தனக்குத் தோன்றாதாகலின், அது தோன்றுமாறும் அதனால் அருள் பிறக்குமாறும் ஒரு வழி சொல்லப்பட்டது.

மணக்குடவர்

தாம் தம்மின் மெலியார்மேல் வெகுண்டெழுமிடத்துத் தம்மின் வலியார் முன் தாம் நிற்கும் நிலையை நினைக்க.

புலியூர்க் கேசிகன்

தன்னை விட மெலிவானவர் மேல் பகைத்துச் செல்லும் போது, தன்னை விட வலியவர் முன்பாகத் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைவிற் கொள்ள வேண்டும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)அருளுடைமை (Arulutaimai)