குறள் (Kural) - 248

குறள் (Kural) 248
குறள் #248
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.

பொருள்
பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம் அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.

Tamil Transliteration
Porulatraar Pooppar Orukaal Arulatraar
Atraarmar Raadhal Aridhu.

மு.வரதராசனார்

பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.

சாலமன் பாப்பையா

பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம்.

கலைஞர்

பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.

பரிமேலழகர்

பொருள் அற்றார் ஒருகால்பூப்பர்- ஊழான் வறியராயினார் அது நீங்கிப் பின் ஒரு காலத்துச் செல்வத்தால் பொலிவர், அருள் அற்றார் அற்றார் மற்று ஆதல் அரிது - அவ்வாறு அன்றி அருளிலாதார் பாவம் அறாமையின் அழிந்தாரே; பின் ஒருகாலத்தும் ஆதல் இல்லை. ( 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது, மேல் பொருள் இன்மையொடு ஒருவாற்றான் ஒப்புமை கூறினார் ஆகலின், அது மறுத்து, பிற ஆற்றான் அதனினும் கொடியது என்பது கூறியவாறு.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பொருள் அற்றார் ஒருகால் பூப்பர்-ஏதேனும் ஒரு வகையிற் செல்வத்தை யிழந்தவர், முயற்சியால் மீண்டும் ஒருகால் அதைப் பெற்றுப் பொலிவடைவர்; அருள் அற்றார் மற்று ஆதல் அரிது-ஆயின், அருட் பண்பை யிழந்தவரோ ஒரேயடியாய் அழிந்தவராவர்; பின்பு ஒருகாலும் ஆக்கம் பெறார். செல்வத்தை யிழந்தவர் மீண்டும் செல்வம் பெற்று இவ்வுலக இன்பத்தை நுகரலாம்; ஆயின் அருளைக் கைவிட்டவர் மறுமையில் வீட்டின்பம் நுகர்தற்கு மீண்டும் இம்மையில் முயற்சி செய்ய முடியாது என்பது கருத்து. 'மற்று' பின்மைப் பொருளது.

மணக்குடவர்

பொருளில்லாதார் ஒருகாலத்தே பொருளுடையராதலும் கூடும்; அருளில்லாதார் கெட்டார், பின்பு ஆக்கமுண்டாகாது. இது பொருளின்மையேயன்றி எல்லாக் கேடு முண்டாமென்றது.

புலியூர்க் கேசிகன்

பொருள் இழந்தவர்களும் ஒரு காலத்தில் பொருள் வளம் அடைவார்கள்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)அருளுடைமை (Arulutaimai)