குறள் (Kural) - 247
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
பொருள்
பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.
Tamil Transliteration
Arulillaarkku Avvulakam Illai Porulillaarkku
Ivvulakam Illaaki Yaangu.
மு.வரதராசனார்
பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.
சாலமன் பாப்பையா
பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.
கலைஞர்
பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது. அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.
பரிமேலழகர்
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு - பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல. ( 'அவ்வுலகம், இவ்வுலகம்' என்பன ஆகுபெயர். இவ்வுலகத்து இன்பங்கட்குப் பொருள் காரணமானாற்போல அவ்வுலகத்து இன்பங்கட்கு அருள் காரணம் என்பதாயிற்று.)
ஞா.தேவநேயப் பாவாணர்
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல் ஆகிய ஆங்கு-பொருட் செல்வம் இல்லாதவர்க்கு இவ்வுலக வின்பம் இல்லாததுபோல; அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை-அருட் செல்வம் இல்லாதவர்க்கு வீட்டுலக இன்ப மில்லை . அவ்வுலகம் இவ்வுலகம் என்பன சேய்மையும் அண்மையும் என்று வந்த பெயர்கள். உலகம் என்பது ஈரிடத்தும் ஆகுபெயர்.
மணக்குடவர்
அருள் இல்லாதார்க்கு மேலுலகமுறுங் காட்சியில்லை; பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் இன்பமுறுங்காட்சி யில்லையானாற்போல. இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது.
புலியூர்க் கேசிகன்
பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகிலே இன்பமான வாழ்க்கை இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்களுக்கு மேலுலகத்து வாழ்வும் இல்லை யாகும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | அருளுடைமை (Arulutaimai) |