குறள் (Kural) - 246

குறள் (Kural) 246
குறள் #246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

பொருள்
அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.

Tamil Transliteration
Porulneengip Pochchaandhaar Enpar Arulneengi
Allavai Seydhozhuku Vaar.

மு.வரதராசனார்

அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

சாலமன் பாப்பையா

அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.

கலைஞர்

அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.

பரிமேலழகர்

அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து ஒழுகுவாரை, பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் - முன்னும் உறுதிப்பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர். (உறுதிப்பொருள்: அறம், 'துன்புறுதல்' - பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலராயின், அவ்வாறு ஒழுகார் என்பது கருத்து.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார்-உயிர்களிடத்து அருள் செய்யாது அதற்கு மாறான கொடுமைகளைச் செய்து ஒழுகுவார்; பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர்-முற்பிறப்பில் அறமாகிய உறுதிப்பொருளைத் தேடாது இப்பிறப்பிலும் அதை மறந்தவர் என்பர் அறிவுடையோர்.

மணக்குடவர்

முற்பிறப்பின்கண் அருளினின்று நீங்கி அல்லாதவற்றைச் செய்தொழுகினவர் இப்பிறப்பின்கண் பொருளினின்று நீங்கி மறவியுமுடையவரென்று சொல்லுவர். இது பொருளில்லையாமென்றது.

புலியூர்க் கேசிகன்

அருள்தலிலே இருந்து விலகித் தீயவைகளைச் செய்து வாழ்கிறவர்களே, உறுதிப் பொருளை இழந்து தம் வாழ்க்கைக் குறிக்கோளையும் மறந்தவராவர்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)அருளுடைமை (Arulutaimai)