குறள் (Kural) - 245

குறள் (Kural) 245
குறள் #245
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.

பொருள்
உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.

Tamil Transliteration
Allal Arulaalvaarkku Illai Valivazhangum
Mallanmaa Gnaalang Kari.

மு.வரதராசனார்

அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.

சாலமன் பாப்பையா

அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.

கலைஞர்

உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.

பரிமேலழகர்

அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருளுடையார்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகாது, வளி வழங்கும் மல்லல்மா ஞாலம் கரி - அதற்குக் காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று. ( சான்று ஆவார் தாம் கண்டு தேறிய பொருளைக் காணாதார்க்குத் தேற்றுதற்கு உரியவர். அருள் ஆள்வார்க்கு அல்லல் உண்டாக ஒரு காலத்தும் ஒருவரும் கண்டறிவார் இன்மையின், இன்மை முகத்தான் ஞாலத்தார் யாவரும் சான்று என்பார். 'வளி வழங்கும் மல்லல் மாஞாலம் கரி' என்றார். எனவே, இம்மைக்கண் என்பது பெற்றாம். 'ஞாலம்' ஆகு பெயர். இவை மூன்று பாட்டானும் அத்துணையுடையார்க்கு இருமையினும் துன்பம் இல்லாமை கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருள் பூண்டவர்க்கு இம்மையிலும் ஒரு துன்பமுமில்லை; வளி வழங்கும் மல்லல் மா ஞாலம் கரி - இதற்குக் காற்று இயங்குகின்ற வளமுள்ள பெரிய மாநிலத்திலுள்ள மக்களெல்லாரும் சான்றாளராவர். அருளுடையார் துன்பப் பட்டதை ஒருவரும் கண்டறியாமையின், எல்லாருஞ் சான்றாளராவர் என்றார். ஞாலத்தார் சான்றாளரெனவே, இம்மையி லென்பது பெறப்பட்டது. 'ஞாலம்' இடவாகுபெயர். ஞாலத்தின் மேற்பரப்பிற் காற்று வழங்காத இடமேயின்மையால், ஞாலம் முழுவதையுங் குறிக்க 'வளி வழங்கும்' என்னும் அடை கொடுத்தார் என்று கொள்ளலாம். இனி, அனந்தநாத நயினார் சமணச்சார்பாக இக் குறட்குக் கூறும் உரை வருமாறு :- அருளாள்வார்க்கு - அருளையுடையவருக்கு, அல்லல் - துன்பம், இல்லை - எப்போதுமில்லை, (அதற்கு) வளி - (கனோகதி, கனவாத, தனுவாத மென்னும் மூன்று) மகா காற்றுக்களால் சூழப்பெற்று, மல்லல் - வலிபொருந்தி, வழங்கும் - நிலை பெற்றிருக்கும், மா - பெரிய, ஞாலம் - உலகம், கரி - சாக்ஷி என்பதாம். "இதன் கருத்து: வலிபொருந்திய மூன்று மகா காற்றுகளின் ஆதாரங்களால் நிலை பெற்றிருக்கும் உலகத்திற்கு அபாய மில்லாதது போல, அருளை ஆளுகின்றவருக்கு யாதொரு துன்பமில்லை என்பதாம்;" - திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைந சமய சித்தாந்த விளக்கமும், பக். 43 - 4. "வளிமிகின் வலியு மில்லை" (புறம். 51) என்று ஐயூர் முடவனார் பாடியிருப்பதனால், சமணச் சார்பின்றியும் இத்தகையவுரை கூறலாமென அறிக.

மணக்குடவர்

அருளுடையார்க்கு அல்லலில்லை: அதற்குச் சான்று காற்றியங்குகின்ற வளப்பத்தினை யுடைய பெரிய வுலகம். இஃது அருளுடையார்க்கு அல்லலின்மை உலகத்தார்மாட்டே காணப்படுமென்றது.

புலியூர்க் கேசிகன்

அருள் கொண்டவராக வாழ்பவர்களுக்கு எந்தத் துன்பமுமே இல்லை; காற்று உயிர் வழங்குதலால் வாழும் வளமான பெரிய உலகமே இதற்குச் சான்று

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)அருளுடைமை (Arulutaimai)