குறள் (Kural) - 244

குறள் (Kural) 244
குறள் #244
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

பொருள்
எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.

Tamil Transliteration
Mannuyir Ompi Arulaalvaarkku Illenpa
Thannuyir Anjum Vinai.

மு.வரதராசனார்

தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.

சாலமன் பாப்பையா

நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.

கலைஞர்

எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.

பரிமேலழகர்

மன்உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - நிலைபேறுடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு, தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப - தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர். (உயிர்கள் எல்லாம் நித்தம் ஆகலின், 'மன் உயிர்' என்றார். அஞ்சுதல்- துன்பம் நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன் கொலை முதலிய பாவங்கள் செய்யான் எனவே மறுமைக்கண் நரகம் புகாமைக்கு ஏது கூறியவாறாயிற்று.)

ஞா.தேவநேயப் பாவாணர்

மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - மற்ற உயிர்களையெல்லாம் பேணி அவற்றினிடத்து அருள் பூண்பவனுக்கு; தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப - தன்னுயிர் அஞ்சுவதற் கேதுவான தீவினைகள் இரா என்று கூறுவர் அறிந்தோர். "தன்னுயிர் போல் மன்னுயிரையும் எண்ண வேண்டும்" . என்னும் பழமொழியில், மன் என்னுஞ் சொல் மற்ற என்று பொருள் படுதலால், அதை யொத்த இவ்விடத்தும் அப்பொருள் உரைக்கப்பட்டது. அஞ்சும் வினை தன்னதாகவும் பிறரதாகவுமிருக்கலாம். தன் வினையாயின் மறுமைத் துன்பமும் பிறர் வினையாயின் இம்மைத் துன்பமும் நோக்கிய அச்சமாகும். உயர்ந்த அருளறம் பூண்டோன் தீவினை செய்யான் என்பதும், அவனால் அருள் செய்யப் பெற்றவனும் நன்மைக்குத் தீமை செய்யான் என்பதும், கருத்து.

மணக்குடவர்

நிலைபெற்ற உயிரை ஓம்பி அருளை ஆள்வானுக்குத் தன்னுயிரஞ்ச வரும் வினை வருவ தில்லையென்று சொல்லுவார். இது தீமை வாராதென்றது.

புலியூர்க் கேசிகன்

நிலைபெற்ற உலகத்தில் உள்ள உயிர்களைக் காத்து, அருள் செய்து வாழ்கின்றவர்களுக்குத் தம் உயிரைக் குறித்து அஞ்சுகின்ற தீவினைகள் இல்லை!

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)அருளுடைமை (Arulutaimai)