குறள் (Kural) - 243

குறள் (Kural) 243
குறள் #243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

பொருள்
அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்.

Tamil Transliteration
Arulserndha Nenjinaark Killai Irulserndha
Innaa Ulakam Pukal.

மு.வரதராசனார்

அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

சாலமன் பாப்பையா

அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.

கலைஞர்

அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்.

பரிமேலழகர்

இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை. ('இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் திணிந்த துன்பவுலகமாகிய நரகத்துட் புகுதல்; அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் நிறைந்த நெஞ்சையுடைய துறவியருக் கில்லை. தீயுழியும் அளறும் போல இருளுலகமும் நரக வகையாம்.

மணக்குடவர்

அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதலில்லை. இது நரகம் புகாரென்றது.

புலியூர்க் கேசிகன்

இருள் அடர்ந்திருக்கும் துன்ப உலகமாகிய நரகத்துக்குச் செல்லுதல், அருள்பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு ஒரு போதுமே இல்லையாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)அருளுடைமை (Arulutaimai)