குறள் (Kural) - 235
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.
பொருள்
துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.
Tamil Transliteration
Naththampol Ketum Uladhaakum Saakkaatum
Viththakark Kallaal Aridhu.
மு.வரதராசனார்
புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.
சாலமன் பாப்பையா
பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம்.
கலைஞர்
துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.
பரிமேலழகர்
நத்தம் (ஆகும்) கேடும் - புகழுடம்பிற்கு ஆக்கமாகுங் கேடும், உளது ஆகும் சாக்காடும் - புகழுடம்பு உளதாகும் சாக்காடும், வித்தகர்க்கு அல்லால் அரிது - சதுரப்பாடுடையார்க்கு அல்லது இல்லை. ('நந்து' என்னும் தொழிற்பெயர் விகாரத்துடன் 'நத்து' என்றாய் பின் 'அம்' என்னும் பகுதிப் பொருள் விகுதிபெற்று 'நத்தம்' என்று ஆயிற்று. 'போல்' என்பது ஈண்டு உரையசை. 'ஆகும்' என்பதனை முன்னும் கூட்டி, 'அரிது' என்பதனைத் தனித்தனி கூட்டி உரைக்க. ஆக்கமாகும் கேடாவது; புகழ் உடம்பு செல்வம் எய்தப் பூதஉடம்பு நல்கூர்தல். உளதாகும் சாக்காடாவது; புகழ் உடம்பு நிற்கப் பூத உடம்பு இறத்தல். நிலையாதனவற்றான் நிலையின் எய்துவார் வித்தகர் ஆகலின், 'வித்தகர்க்கு அல்லால்' அரிது என்றார். இவை இரண்டு பாட்டானும் புகழ் உடையார் எய்தும் மேன்மை கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
நத்தம் போல் கேடும் - புகழுடம்பின் கரு வளரச்சியடைவது போல் (முழு வளரச்சிபுற்ற) பூதவுடம்பு தளர்ச்சியடைவதும்; உளது ஆகும் சாக்காடும் - அப்புகழுடம்பின் பிறப்பாகிய பூதவுடம்பின் இறப்பும்; வித்தகர்க்கு அல்லால் அரிது - திறப்பாடுடையவர்க்கன்றி ஆகாவாம். பொதுவாக, ஒருவன் வாழ்க்கைப் பொறுப் பேற்ற பின்பே புகழுக் கேற்ற ஈகை வினைகளையும் தொண்டுகளையுஞ் செய்ய முடியும். அதற்குள் அவன் உடம்பு முழு வளர்ச்சி யடைந்திருக்கும். புகழ்த் தொண்டி லீடுபட்டுக் காலஞ் செல்லச் செல்ல, மூப்பினால் உடம்பு தளர்ந்து வருகின்றது. இறுதியில் சாக்காடு நேர்கின்றது. அதுவரை பொதுநலத் தொண்டைத் தொடர்ந்து செய்து வந்ததினால், புகழும் படிப்படியாக வளர்ந்து அவன் சாக்காட்டுச் சமையத்தில் முழுவளர்ச்சி யடைந்து, பூதவுடம்பு மறைந்தபின் தானே விளங்கித் தோன்றுகின்றது. புகழை ஓர் உடம்பாக உருவகிப்பது இலக்கிய மரபு. பூதவுடம்பு தாய்வயிற்றிற் கருவாகத் தொடங்கிப் படிப்படியாக வளர்ந்து பத்தாம் மாதம் முழுவளர்ச்சி யடைந்து குழவியாகப் பிறக்கின்றது. இந்நிலைமையைப் புகழுடம்பிற்கும் பொருத்திக் கூறியுள்ளார் ஆசிரியர் வள்ளுவனார். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் பொதுநல வூழியத்தைத் தொடங்கும்போது, புகழுடம்பு கருக்கொள்கின்றது. ஊழியம் நீட நீடப் புகழுடம்பு வளர்கின்றது. பூதவுடம்பு தளர்கின்றது. சாக்காட்டிற் புகழுடம்பு வளர்கின்றது. பூதவுடம்பு இறக்கின்றது. இதையே ' நத்தம்போற் கேடும் உளதாகும் சாக்காடும்' என்றார். போல் என்பது வளர்ச்சிக்கும் தளர்ச்சிக்கும் ஒப்புமை கூறிய உவமையுருபு. இது குழவி வளர்ந்தது போலக்கிழவி தளர்ந்தாள் என்பது போன்றது. ஆதலால், போல் என்பது பரிமேலழகர் கூறுவது போல் உரையசையன்று. நந்துதல் வளர்தல்.நத்தம்-வளர்ச்சி; முதனிலை வலித்து ஈறுபெற்ற தொழிற் பெயர். 'அம்' முதனிலைப் பொருளீறு (பகுதிப் பொருள் விகுதி) அன்று. வாழ்நாள் முழுதும் பொதுநலத் தொண்டாற்றுவது திறப்பாடான செயலே.
மணக்குடவர்
ஆக்கம்போலக் கேடும் உளதானாற்போலச் சாதலும் வல்லவற்கல்லது அரிது. இது புகழ்பட வாழ்தல் மக்களெல்லார்க்கும் அரிதென்றது.
புலியூர்க் கேசிகன்
புகழால் மேன்மை பெறக்கூடிய கேடும், செத்தும் புகழால் வாழ்ந்திருக்கும் சாவும், அறிவிற் சிறந்தோருக்கு அல்லாமல், பிறருக்கு ஒரு போதுமே கிடையாது
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | புகழ் (Pukazh) |