குறள் (Kural) - 236

குறள் (Kural) 236
குறள் #236
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

பொருள்
எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.

Tamil Transliteration
Thondrin Pukazhotu Thondruka Aqdhilaar
Thondralin Thondraamai Nandru.

மு.வரதராசனார்

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

சாலமன் பாப்பையா

பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது.

கலைஞர்

எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது.

பரிமேலழகர்

தோன்றின் புகழோடு தோன்றுக-மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; 'அஃது இலார்' தோன்றலின் தோன்றாமை நன்று-அக்குணமில்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று (புகழ்; ஈண்டு ஆகுபெயர். அஃது இலார் என்றமையின் மக்களாய் என்பதூஉம், 'மக்களாய்ப் பிறவாமை' என்ற அருத்தாபத்தியான் 'விலங்காய்ப் பிறத்தல்' என்பதூஉம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் 'நன்று' என்றார்)

ஞா.தேவநேயப் பாவாணர்

தோன்றின் புகழொடு தோன்றுக-ஒருவர் இவ்வுலகத்திற் பிறக்கின் புகழ்க் கேதுவான குணத்தொடு பிறக்க; அஃது இலார் தோன்றலின் தோன்றாமை நன்று-அக்குண மில்லாதார் பிறத்தலை விடப் பிறவாதிருத்தலே நல்லது. பிறத்தலும் பிறவாமையும் இறைவன் ஏற்பாட்டின்படி அல்லது ஊழின் அமைப்புப்படியே நிகழ்வதால், அவை பிறப்பவரின் உணர்ச்சியொடு கூடியனவும் விருப்பிற்கு அடங்கியனவுமல்ல. ஆதலால், இங்குத் 'தோன்றுக', 'தோன்றற்க' என்று கூறியதெல்லாம், புகழுக் கேற்ற நல்வினை செய்வானைப் பாராட்டியதும் அது செய்தானைப் பழித்ததுமேயன்றி வேறல்ல என அறிக . புகழ் என்பது இங்கு ஆகுபொருளது.

மணக்குடவர்

பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று. இது புகழ்பட வாழவேண்டு மென்றது.

புலியூர்க் கேசிகன்

உலகத்தார் முன்பாக ஒருவன் தோன்றினால் புகழோடுதான் தோன்ற வேண்டும்; புகழ் இல்லாதவர் தோன்றுவதை விடத் தோன்றாமற் போவதே நல்லது

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)புகழ் (Pukazh)