குறள் (Kural) - 234

குறள் (Kural) 234
குறள் #234
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.

பொருள்
இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது.

Tamil Transliteration
Nilavarai Neelpukazh Aatrin Pulavaraip
Potraadhu Puththel Ulaku.

மு.வரதராசனார்

நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.

சாலமன் பாப்பையா

தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்.

கலைஞர்

இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈ.ட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது.

பரிமேலழகர்

நிலவரை நீள் புகழ் ஆற்றின் - ஒருவன்நில எல்லைக் கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச் செய்யுமாயின் புத்தேள் உலகு புலவரைப் போற்றாது - புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது. (புகழ் உடம்பான் இவ்வுலகும், புத்தேள் உடம்பான் அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின், புலவரைப் போற்றாது என்றார். அவன் இரண்டு உலகும் ஒருங்கு எய்துதல், 'புலவர் பாடும் புகழுடையோர்விசும்பின் வலவன் ஏவாவான ஊர்தி எய்துப என்பதம் செய்வினை முடித்து' (புறநா.27), எனப் பிறராலும் சொல்லப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நிலவரை நீள்புகழ் ஆற்றின் - ஒருவன் ஈகையால் நிலவுலகத்தின்கண் நிலையான புகழைச் செய்வானாயின், புத்தேள் உலகு புலவரைப் போற்றாது-தேவருலகம் அவனையன்றி அறிவால் மட்டுஞ் சிறந்தவரை விரும்பாது. இக் கொள்கையை. "புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவ னேவா வான வூர்தி யெய்துப வென்பதஞ் செய்வினை முடித்தெனக் கேட்ப லெந்தை சேட்சென்னி நலங்கிள்ளி வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி யருள வல்லை யாகுமதி யருளிலர் கொடாமை வல்ல ராகுக கெடாத துப்பினின் பகையெதிர்ந் தோரே". என்னும் 27-ஆம் புறப்பாட்டுப் பகுதியாலும் அறிக. இதனால் வேள்வி செய்தவர் விண்ணுல கடைவர் என்னும் ஆரியக் கொள்கை மறுக்கப் பட்டமை காண்க.

மணக்குடவர்

ஒருவன் நிலத்தெல்லையின் கண்ணே நெடிய புகழைச் செய்வனாயின் தேவருலகம் புலவரைப் போற்றாது இவனைப் போற்றும். புலவரென்றார் தேவரை, அவர் புலனுடையாராதலான். இது புகழ் செய்தாரைத் தேவருலகம் போற்றுமென்றது.

புலியூர்க் கேசிகன்

உலகத்தின் எல்லைவரை பரவி நிற்கும் புகழுக்குரிய செயலை ஒருவன் செய்தால், வானுலகமும் தேவரைப் போற்றாது; அப் புகழாளனையே விரும்பிப் போற்றும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)புகழ் (Pukazh)