குறள் (Kural) - 233

குறள் (Kural) 233
குறள் #233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.

பொருள்
ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

Tamil Transliteration
Ondraa Ulakaththu Uyarndha Pukazhallaal
Pondraadhu Nirpadhon Ril.

மு.வரதராசனார்

உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா

தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.

கலைஞர்

ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

பரிமேலழகர்

ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்- தனக்கு இணையின்றாக ஓங்கிய புகழல்லது; உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்-உலகத்து இறவாது நிற்பது பிறிதொன்று இல்லை. (இணை இன்றாக ஓங்குதலாவது : கொடுத்தற்கு அரிய உயிர் உறுப்புப் பொருள்களைக் கொடுத்தமை பற்றி வருதலால் தன்னோடு ஒப்பது இன்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவது என்பதாம். இனி 'ஒன்றா' என்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லின் எனவும், ஒரு தலையாகப் பொன்றாது நிற்பது எனவும் உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் புகழ் சிறப்புக் கூறப்பட்டது.

ஞா.தேவநேயப் பாவாணர்

ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்-தனக்கு இணையில்லாவாறு உயர்ந்த புகழல்லாமல்; உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்- இவ்வுலகத்து அழியாது நிற்பது வேறொன்றும் இல்லை. ஓர் உயிரைக் காத்தற்கு உணவும் பொருளும் மட்டுமன்றி உறுப்பும் உடம்பும் உதவ நேருமாதலின், இணையின்றி யுயர்ந்த புகழ் என்றார். ஒன்றா என்பது ஒன்றாக என்பதன் ஈறு தொகல்.

மணக்குடவர்

உயர்ந்த புகழல்லது இணை யின்றாக உலகத்துக் கெடாது நிற்பது பிறிதில்லை. இது புகழ் மற்றுள்ள பொருள்போலன்றி அழியாது நிற்கு மென்றது.

புலியூர்க் கேசிகன்

உயர்ந்த புகழ் அல்லாமல், உலகத்திலே ஒப்பற்ற ஒரு பொருளாக அழிவில்லாமல் நிலைத்து நிற்கக்கூடியது யாதுமே இல்லை

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)புகழ் (Pukazh)