குறள் (Kural) - 232

குறள் (Kural) 232
குறள் #232
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.

பொருள்
போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்.

Tamil Transliteration
Uraippaar Uraippavai Ellaam Irappaarkkondru
Eevaarmel Nirkum Pukazh.

மு.வரதராசனார்

புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

சாலமன் பாப்பையா

சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.

கலைஞர்

போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்.

பரிமேலழகர்

உரைப்பார் உரைப்பவை எல்லாம் - உலகத்து ஒன்று உரைப்பார் உரைப்பன எல்லாம், இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ் - வறுமையான் இரப்பார்க்கு அவர் வேண்டியது ஒன்றை ஈவார் கண் நிற்கும் புகழாம். (புகழ்தான் உரையும் பாட்டும் என இருவகைப்படும்(புறநா.27) அவற்றுள் 'உரைப்பார் உரைப்பவை' என எல்லார்க்கும் உரிய வழக்கினையே எடுத்தாராயினும்,இனம் பற்றிப் புலவர்க்கே உரிய செய்யுளும் கொள்ளப்படும், படவே 'பாடுவார் பாடுவன எல்லாம் "புகழாம் என்பதூஉம் பெற்றாம். ஈதற்காரணம் சிறந்தமை இதனுள்ளும் காண்க. இதனைப் பிறர்மேலும் நிற்கும் என்பார். தாம் எல்லாம் சொல்லுக ; புகழ் ஈவார் மேல் நிற்கும்' என்று உரைப்பாரும் உளர். அது புகழது சிறப்பு நோக்காமை அறிக.)

ஞா.தேவநேயப் பாவாணர்

உரைப்பார் உரைப்பவை எல்லாம் - உலகத்தில் ஒருவரைப் பற்றிச் சிறப்பாகச் சொல்வதெல்லாம்; இரப்பார்க்கு ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ் - வறுமையால் இரப்பவர்க்கு அவர் வேண்டிய தொன்றை ஈவார்மேல் நிற்கும் புகழே. உரைத்தல் உரைநடையுஞ் செய்யுளுமாகிய இருவடிவிலும் நிகழுமாதலின், இங்கு உரைத்தலென்றது அவ்விருவடிவிற்கும் பொதுவாம். மேற்குறளிற் குறிப்பாகச் சொன்ன ஈதல்வகை இங்கு வெளிப்படையாகக் கூறப்பட்டது.

மணக்குடவர்

சொல்லுவார் சொல்லுவனவெல்லாம் இரந்துவந்தார்க்கு அவர் வேண்டியதொன்றைக் கொடுப்பார்மேல் நில்லாநின்ற புகழாம்.

புலியூர்க் கேசிகன்

புகழ்ச்சியாகப் பேசுகிறவர் பேசுகின்றவற்றுள் எல்லாம், இரப்பவர்க்கு ஒன்றைக் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழே எப்போதும் நிலையானது

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)புகழ் (Pukazh)