குறள் (Kural) - 231

குறள் (Kural) 231
குறள் #231
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

பொருள்
கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.

Tamil Transliteration
Eedhal Isaipata Vaazhdhal Adhuvalladhu
Oodhiyam Illai Uyirkku.

மு.வரதராசனார்

வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா

ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.

கலைஞர்

கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.

பரிமேலழகர்

'ஈதல்' - வறியார்க்கு ஈக, இசைபட வாழ்தல் - அதனால் புகழ் உண்டாக வாழ்க, அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை - அப்புகழ் அல்லது மக்கள் உயிர்க்குப்பயன் பிறிது ஒன்று இல்லை ஆகலான்.(இசைபட வாழ்தற்குக் கல்வி, ஆண்மை முதலிய பிற காரணங்களும் உளவேனும் உணவின் பிண்டம் உண்டி முதற்று (புறநா.18) ஆகலின் ஈதல் சிறந்தது என்பதற்கு ஞாபகமாக 'ஈதல்' என்றார். உயிர்க்கு என்பது, பொதுப்படக் கூறினாரேனும், விலங்கு உயிர்கட்கு ஏலாமையின், மக்கள் உயிர்மேல் நின்றது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஈதல்-வறியார்க்கு வேண்டியலற்றை இயன்ற வரை ஈக; இசைபட வாழ்தல்-அதனாற் புகழுண்டாக வாழ்க; அது அல்லது உயிர்க்கு ஊதியமில்லை-அப்புகழன்றி மக்களுக்கு இவ்வுலகத்திற் பெறக்கூடிய நிலையான பேறு வேறு ஒன்றுமில்லை. இடத்தில் வறியார்க்கு நிலமும் கருவியில் வறியார்க்குப் பொறியும் நலத்தில் வறியார்க்கு மருந்தும் அறிவில் வறியார்க்கு நூலும் காப்பில் வறியார்க்குப் பாதுகாப்பும் அளிப்பதும் ஈதல் வகைகளேயாயினும், "உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே யுணவின் பிண்டம்" என்று குடபுவியனாரும் (புறம் : 18). "உடம்பா ரழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ் ஞானஞ் சேரவு மாட்டார்" என்று திருமூலரும் (திருமந்திரம், 724) கூறுவதால், பொருளில் வறியார்க்கு உணவேனும் அதற்குரிய பொருளேனும் ஈதலே முன்மையும் (Priority) முதன்மையும் பெறுவதாம். ' ஈதல் ', ' வாழ்தல் ' இரண்டும் தல்லீற்று வியங்கோள். ஈதல் வேறுயிரினங்கட்கு இன்மையின், இங்கு உயிரென்றது மக்களுயிரை.

மணக்குடவர்

புகழ்பட வாழ்தலாவது கொடுத்தல். அக்கொடையா னல்லது உயிர்க்கு இலாபம் வேறொன்றில்லை. இது புகழுண்டாமாறு கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

உள்ளதைப் பலருக்கும் பகுத்துக் கொடுத்துப் புகழோடு வாழவேண்டும்; அப்படிப்பட்ட வாழ்வு அல்லாமல் ‘உயிருக்கு ஊதியம்’ என்பது வேறு யாதும் இல்லை

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)புகழ் (Pukazh)