குறள் (Kural) - 224

குறள் (Kural) 224
குறள் #224
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.

பொருள்
ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.

Tamil Transliteration
Innaadhu Irakkap Patudhal Irandhavar
Inmukang Kaanum Alavu.

மு.வரதராசனார்

பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.

சாலமன் பாப்பையா

கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.

கலைஞர்

ஈ.தல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.

பரிமேலழகர்

இரக்கப்படுதல் இன்னாது - இரத்தலேயன்றி இரக்கப்படுதலும் இனிது அன்று, இரந்தவர் இன்முகம் காணும் அளவு - ஒரு பொருளை இரந்தவர் அது பெற்றதனால் இனிதாகிய அவர் முகங் காணும் அளவும்; (எச்ச உம்மையும் முற்று உம்மையும் விகாரத்தால் தொக்கன. இரக்கப் படுதல் - 'இரப்பார்க்கு ஈவல்' என்று இருத்தல். அதனை 'இன்னாது' என்றது. 'எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை' (நாலடி.145) கூடுங்கொல்லோ என்னும் அச்சம் நோக்கி. எனவே எல்லாப் பொருளும் ஈதல் வேண்டும் என்பது பெறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இரந்தவர் இன்முகம் காணும் அளவு - ஒருபொருளை இரந்தவர் அதைப் பெற்றதினால் மலரும் அவரது இனிய முகத்தைக் காணுமளவும்; இரக்கப்படுதல் இன்னாது - இரத்தலேயன்றி இரக்கப் படுதலும் குடிப்பிறந்தானுக்குத் துன்பந்தருவதாம். படுதலும் என்னும் எச்சவும்மையும் அளவும் என்னும் முற்றும் மையுந் தொக்கன. இன்முகங் காணுமளவுந் துன்பமென்றதனால், இரந்த பொருள்களை யெல்லாம் ஈதல் வேண்டுமென்பது பெறப்பட்டது. ஆயினும், தன் மானத்திற்கு இழுக்கு நேராவாறு என்னும் வரையறை பகுத்தறிவாற் கொள்ளப்பெறும்.

மணக்குடவர்

பிறன் ஒருவனா லிரக்கப்படுதலும் இன்னாது எவ்வளவு மெனின், இரந்து வந்தவன் தான் வேண்டியது பெற்றதனானே இனிதான முகங் காணுமளவும். இது கொடுக்குங்கால் தாழாது கொடுக்க வேண்டுமென்றது.

புலியூர்க் கேசிகன்

உதவியை நாடி வந்து இரந்தவருடைய மகிழ்ச்சியான முகத்தைக் காணும் வரைக்கும், இரந்து கேட்கப்படுதலும் ஈகையாளனுக்குத் துன்பம் தருவதேயாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)ஈகை (Eekai)