குறள் (Kural) - 223

குறள் (Kural) 223
குறள் #223
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.

பொருள்
தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.

Tamil Transliteration
Ilanennum Evvam Uraiyaamai Eedhal
Kulanutaiyaan Kanne Yula.

மு.வரதராசனார்

யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.

சாலமன் பாப்பையா

ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு.

கலைஞர்

தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.

பரிமேலழகர்

'இலன் என்னும் எவ்வம் உரையாமை - யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும், ஈதல் - அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும், உள குலன் உடையான் கண்ணே- இவை இரண்டும் உளவாவன குடிப் பிறந்தான் கண்ணே. (மேல் தீது என்றது ஒழிதற்கும் நன்று என்றது செய்தற்கும் உரியவனை உணர்த்தியவாறு. இனி இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் என்பதற்கு, அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல்' எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல் எனவும், யான் இதுபொழுது பொருளுடையேன் அல்லேன் 'எனக் கரப்பார்' சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் எனவும் உரைப்பாரும் உளர். அவர் 'ஈதல்' என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பர்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இலன் என்னும் எவ்வம் உரையாமை - யான் ஏழையென்று இரப்போன் சொல்லும் இழிவுரையைத் தான் பிறனிடத்துச் சொல்லாமையும்; ஈதல் - அவ் விரப்போன் வேண்டியதொன்றை இல்லையென்னாது அவனுக்கு ஈதலும்; குலன் உடையான் கண்ணே உள - ஆகிய இரண்டும் உயர்குடிப் பிறந்தான் கண்ணே உள்ளன. எவ்வம் துன்பம். அது இங்குத் துன்பந்தரும் இழிவுரையைக் குறித்தது. இனி, ' இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்' என்னும் தொடருக்குப் பின்வருமாறும் உரைகள் கூறப் பெறும். (1) யான் பொருளில்லாதவன் என்று இரப்போன் தன் இளிவரவைச் சொல்லுமுன் அவன் குறிப்பறிந்து கொடுத்தல். (2) அவ்விழிவுரையைப் பின்னும் இன்னொருவனிடம் சென்று உரையா வண்ணம் அவ்விரப்போனுக்கு நிரம்பக் கொடுத்தல். (3) இல்லத்தான் என்னிடம் இப்பொழுது பொருளில்லையென்று ஈயாதார் சொல்லும் இழிவுரையைச் சொல்லாது கொடுத்தல். இம் மூவுரையும் எளிதாய்ப் பொருந்துவன. இனி, வலிந்து பொருந்தும் வேறுமூவுரையுமுள.அவை வருமாறு : - (1) அவ்விரப்போனை ஒன்றுமில்லாதவனென்று பிறர் இழிந்துரையா வண்ணம் கொடுத்தல். (2) அவ்விரப்போனுக்கு மறுத்த இல்லறத்தான் அது பற்றிப்பின்பு வறியனானபின், தானும் (3) அவனை யிரந்தோனும் பிறரும் இலனென்னும் இனிவரவு கூறாவண்ணங் கொடுத்தல். இவ்வுரைகட்கெல்லாம் ' ஈதல் ' என்பது 139 ஆம் குறளிலுள்ள ' சொலல் ' என்பது போலப் பன்மையாம். இக்குறளால், உயர்குடிப் பிறந்தோன் ஈகையாளனே யன்றிப் பிராமண னல்லன் என்பது பெறப்பட்டது.

மணக்குடவர்

இரந்துவந்தார்க்கு இலனென்னா நின்ற துன்பத்தைக் கூறாது ஈதலும் குடிப்பிறந்தான்மாட்டே யுளதாம். இது கொடுக்குங்கால் மாறாது கொடுக்க வேண்டுமென்றது.

புலியூர்க் கேசிகன்

ஒருவன் வந்து, ‘நான் யாதும் இல்லாதவன்’ என்று தன் துன்பத்தைச் சொல்லும் முன்பாகவே, அவனுக்கு உதவும் தன்மை உயர்ந்த குடிப்பிறப்பாளனிடம் உண்டு

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)ஈகை (Eekai)