குறள் (Kural) - 22

குறள் (Kural) 22
குறள் #22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

பொருள்
உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.

Tamil Transliteration
Thurandhaar Perumai Thunaikkoorin Vaiyaththu
Irandhaarai Ennikkon Tatru.

மு.வரதராசனார்

பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

சாலமன் பாப்பையா

ஆசைகளை
விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த
உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.

கலைஞர்

உலகில்
இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான்
உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.

பரிமேலழகர்

துறந்தார் பெருமை துணைக் கூறின் - இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையர் என அறியலுற்றாற் போலும். (முடியாது என்பதாம், 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

துறந்தார் பெருமை துணைக்கூறின் - இருவகைப்பற்றையும் முற்றும் விட்டுவிட்ட முனிவரது பெருமையை இவ்வளவினதென்று அளவிட்டுக் கூறப்புகின்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - அது இவ்வுலகத்தில் இதுவரை பிறந்திறந்தவரையெல்லாம் இத்தனையர் என எண்ணியறியப் புகுந்தாற் போல்வதாம். இரண்டும் முடியாதென்பது. கொண்டால் என்னும் வினையெச்சம் கொண்டு எனத்திரிந்தது. கொண்ட அற்று எனினுமாம்.

மணக்குடவர்

காம முதலாகத் துறந்தார் பெருமைக்கு அளவு கூறின் உலகத்துப் பிறந்திறந்தாரை இத்துணையாரென்று எண்ணி யறியலுற்றாற் போலும். து பெருமைக்கெல்லை கூறுத லரிதாயினுஞ் சில சொல்லப் புகாநின்றே னென்றது கருதிக் கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

பற்றுகளை விட்டவரின் பெருமையைஅளந்து சொல்வதானால் உலகில் இதுவரை இறந்தவர்களைக் கணக்கெடுத்தாற் போன்றதாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)பாயிரவியல் (Paayiraviyal)
அதிகாரம் (Adhigaram)நீத்தார் பெருமை (Neeththaar Perumai)