குறள் (Kural) - 21

குறள் (Kural) 21
குறள் #21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

பொருள்
ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்.

Tamil Transliteration
Ozhukkaththu Neeththaar Perumai Vizhuppaththu
Ventum Panuval Thunivu.

மு.வரதராசனார்

ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

சாலமன் பாப்பையா

தமக்குரிய
ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே,
சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.

கலைஞர்

ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்.

பரிமேலழகர்

ஒழுக்கத்து நீத்தார் பெருமை - தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை; விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு - விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு. (தமக்கு உரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவம் தேய அறியாமை நீங்கும் ; அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும் அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும் ; அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய 'பயன்இல்' முயற்சிகள் எல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம்; அஃது உண்டாக,மெய்யுணர்வு பிறந்து புறப்பற்று ஆகிய 'எனது' என்பதும், அகப்பற்று ஆகிய 'யான்' என்பதும் விடும். ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம் முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க. 'பனுவல்' எனப் பொதுபடக் கூறிய அதனான் ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம். செய்தாரது துணிவு பனுவல்மேல் ஏற்றப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பனுவல் துணிவு - நூல்களது துணிவு; ஒழுக்கத்து நீத்தார் பெருமை - தமக்குரிய ஒழுக்கத்தின்கண் உறைத்து நின்று உலகப்பற்றைத் துறந்த முனிவரது பெருமையை; விழுப்பத்து வேண்டும் - சிறந்த பொருள் எல்லாவற்றுள்ளும் சிறந்ததாக விரும்பும். ஆசிரியர் துணிவு அவர்நூல்மேல் ஏற்றப்பட்டது. "தொண்டரே இறைவ னுள்ளத் தொடுக்கம் தொண்டர்தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே". என்னும் ஒளவையார் கூற்றைத் தழுவியது இக்குறள். பற்று, நான் என்று தன்னைப்பற்றிய அகப்பற்றும் எனது என்று தன் உடமைகளைப் பற்றிய புறப்பற்றும் என இருவகையாம்.

மணக்குடவர்

ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும். தானுமொரு பொய்யைச் சொல்லும் நூலும் தன்னை யெல்லாருங் கொண்டாடுவதற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும். அதனானே யானுஞ் சொல்லுகின்றேனென்பது.

புலியூர்க் கேசிகன்

ஒழுக்கத்தில் நிலையாக நின்று, பற்றுகளை விட்டவர்களின் பெருமையைப் போற்றிச் சிறப்பித்துச் சொல்வதே நூல்களின் துணிபு

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)பாயிரவியல் (Paayiraviyal)
அதிகாரம் (Adhigaram)நீத்தார் பெருமை (Neeththaar Perumai)