குறள் (Kural) - 218

குறள் (Kural) 218
குறள் #218
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.

பொருள்
தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.

Tamil Transliteration
Itanil Paruvaththum Oppuravirku Olkaar
Katanari Kaatchi Yavar.

மு.வரதராசனார்

ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

சாலமன் பாப்பையா

செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.

கலைஞர்

தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.

பரிமேலழகர்

இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் - செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார், கடன்அறி காட்சியவர் - தாம் செய்யத் தகுந்தவற்றை அறிந்த இயற்கை அறிவுடையார். (பிற எல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கடன் அறி காட்சியவர் - கடப்பாட்டை யறிந்த அறிவுடையோர்; இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் - தம் செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார். வடார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த செண்டத்தூர் ஐயாத்துரை முதலியார் என்னும் வள்ளல், தம் செல்வம் சுருங்கிய காலத்தும் ஓரிலக்கம் உருபா கடன்கொண்டு ஒப்புரவாற்றியது, இதற்கோரெடுத்துக்காட்டாம்.

மணக்குடவர்

செல்வம் விரிவற்ற காலத்திலும் ஒப்புரவிற்குத் தளரார்: ஒப்புரவை யறியும் அறிவுடையார். இது செல்வம் விரிவில்லாத காலத்தினும் செய்யவேண்டு மென்றது.

புலியூர்க் கேசிகன்

ஒப்புரவு செய்தலாகிய கடமையை அறிந்த அறிவாளர்கள், அதற்கேற்ற பொருள்வசதி இல்லாத காலத்திலும் முடிந்தவரை உதவத் தளர மாட்டார்கள்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)ஒப்புரவறிதல் (Oppuravaridhal)