குறள் (Kural) - 219

குறள் (Kural) 219
குறள் #219
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.

பொருள்
பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்.

Tamil Transliteration
Nayanutaiyaan Nalkoorndhaa Naadhal Seyumneera
Seyyaadhu Amaikalaa Vaaru.

மு.வரதராசனார்

ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.

சாலமன் பாப்பையா

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.

கலைஞர்

பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்.

பரிமேலழகர்

நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது, செயும் நீர செய்யாது அமைகலா ஆறு - தவிராது செய்யும் நீர்மையையுடைய அவ்வொப்புரவுகளைச் செய்யப்பெறாது வருந்துகின்ற இயல்பாம். (தான் நுகர்வன நுகரப் பெறாமை அன்று என்பதாம். இவ்விரண்டு பாட்டானும் வறுமையான் ஒப்புரவு ஒழிதற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - ஒப்புரவாளன் வறியவனாதலாவது; செயும்நீர செய்யாது அமைகலா வாறு - தவிராது செய்யும் தன்மையவான வேளாண்மைச் செயல்களைச் செய்யவியலாது அமைதியற்றிருக்கும் நிலைமையே. அமைதியற்றிருக்கும் நிலைமையாவது வருந்துதல். ஒப்புரவுசெய்யவியலாவாறு செல்வம் அற்றவிடத்து, பிறரை நுகர்வியாமைபற்றியேயன்றித் தான் நுகராமை பற்றி வருந்துவதில்லை யென்பதாம்.

மணக்குடவர்

நயனுடையான் நல்கூர்ந்தா னாகின்றது செய்ய வேண்டுவன செய்யாதே யமைய மாட்டாத இயல்பாம். இது செல்வங் குறைபடினுஞ் செய்வரென்றது.

புலியூர்க் கேசிகன்

ஒப்புரவாகிய நல்ல பண்பை உடையவன் பொருளற்று வறுமை உடையவனாதல், செய்யத் தகுந்த உதவிகளைச் செய்யவியலாது வருந்துதலே ஆகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)ஒப்புரவறிதல் (Oppuravaridhal)