குறள் (Kural) - 217

குறள் (Kural) 217
குறள் #217
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

பொருள்
பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.

Tamil Transliteration
Marundhaakith Thappaa Maraththatraal Selvam
Perundhakai Yaankan Patin.

மு.வரதராசனார்

ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.

சாலமன் பாப்பையா

பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.

கலைஞர்

பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.

பரிமேலழகர்

செல்வம் பெருந்தகையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்யும் பெரிய தகைமையுடையான் கண்ணே படுமாயின், மருந்து ஆகித் தப்பா மரத்தற்று - அஃது எல்லா உறுப்பும் பிணிகட்கு மருந்தாய்த் தப்பாத மரத்தை ஒக்கும். (தப்புதலாவது, கோடற்கு அரிய இடங்களில் இன்றாதல், மறைந்து நின்றாதால் , காலத்தான் வேறுபட்டாதல், பயன்படாமை. தன் குறை நோக்காது எல்லார் வருத்தமும் தீர்க்கும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் கடப்பாட்டாளனுடைய பொருள் பயன்படுமாறு கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

செல்வம் பெருந்தகையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்யும் பெருந்தகையாளனிடம் சேரின், மருந்து ஆகித் தப்பா மரத்து அற்று - அது வேர்முதல் கொழுந்துவரை எல்லாவுறுப்பும் பல்வேறு நோய்க்கு மருந்தாகித் தப்பாது பயனபடும் மரத்தையொக்கும். மரத்தை மருந்தென்றமையால் அதன் உறுப்புக்களெல்லாம் மருந்தாதல் அறியப்படும். சில மருந்துகள் சிலருடம்பிற்கு ஏற்காமையானும் சிறிது காலம் பொறுத்து ஆற்றல் கெடுதலானும், எல்லார்க்கும் என்றும் தப்பாது குணந்தரும் என்பதை யுணர்த்தத் ' தப்பா மரம் ' என்றார். மேற்கூறிய மூவேறுவமங்களும் ஊருணியென்பது எல்லார்க்கும் பயன்படும் செல்வத்தையும், பழுமரம் என்பது பலர்க்குப் பயன்படும் செல்வத்தையும் மருந்து மரம் என்பது சிலர்க்குப் பயன்படும் செல்வத்தையும் குறிக்குமென்று கொள்ள இடமுண்டு. இங்ஙனம் பயனளவில் வேறுபடுவது செல்வத்தின் அளவையும் ஒப்புரவாளரின் குறிக்கோளையும் பொறுத்ததாகும். ' ஆல் ' அசைநிலை.

மணக்குடவர்

பிணிமருந்தாகித் தேடுவார்க்கு மறைதலில்லாத மரத்தை யொக்கும், செல்வமானது பெருந்தகைமையான்மாட்டு உண்டாயின். தப்புதலென்றது ஒளித்தலை.

புலியூர்க் கேசிகன்

செல்வமானது பெருந்தகுதி உடையவனிடம் சேர்தல், பிணி தீர்க்கும் மருந்தாகிப் பயன் தரத் தவறாத மருந்துமரம் போல எப்போதும் பயன் தருவதாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)ஒப்புரவறிதல் (Oppuravaridhal)