குறள் (Kural) - 216

குறள் (Kural) 216
குறள் #216
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

பொருள்
ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.

Tamil Transliteration
Payanmaram Ulloorp Pazhuththatraal Selvam
Nayanutai Yaankan Patin.

மு.வரதராசனார்

ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா

பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.

கலைஞர்

ஈ.ர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.

பரிமேலழகர்

செல்வம் நயன் உடையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்வான் கண்ணே படுமாயின், பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்று - அது பயன்படுமரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும். (உலக நீதி பலவற்றுள்ளும் ஒப்புரவு சிறந்தமையின் அதனையே 'நயன்' என்றார்.எல்லார்க்கும் எளிதில் பயன் கொடுக்கும் என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

செல்வம் நயன் உடையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்யும் நேர்மையாளனிடம் சேருமாயின்; பயன் மரம் உள்ளூர்ப்பழுத்த அற்று - அது பயன்படும் மரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும். ஒப்புரவு நேர்மை மிக்க செயலாதலின் அதை நயன் என்றார். நச்சு மரத்தை விலக்கப் பயன்மரம் என்றார். ஊருள் என்பது உள்ளூர் என முறை மாறியது இலக்கணப் போலி. ' ஆல் ' அசைநிலை.

மணக்குடவர்

பயன்படுமரம் ஊர்நடுவே பழுத்தாற் போலும்: பிறரால் விரும்பப்படுவான்மாட்டுச் செல்வ முண்டாயின். இது வேண்டாதார்க்கும் பயன்படு மென்றது.

புலியூர்க் கேசிகன்

செல்வம் நல்ல பண்பு உடையவனிட்ம சென்று சேர்தலானது, ஊருக்குள்ளே பழமரம் பழுத்திருப்பது போலப் பலருக்கும் பயன் தருவதாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)ஒப்புரவறிதல் (Oppuravaridhal)