குறள் (Kural) - 215

குறள் (Kural) 215
குறள் #215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

பொருள்
பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.

Tamil Transliteration
Ooruni Neernirain Thatre Ulakavaam
Perari Vaalan Thiru.

மு.வரதராசனார்

ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா

உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.

கலைஞர்

பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.

பரிமேலழகர்

உலகு அவாம் பேர் அறிவாளன் திரு - உலகநடையை விரும்பிச் செய்யும்பெரிய அறிவினை யுடையவனது செல்வம், ஊருணி நீர் நிறைந்தற்று - ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்தாற் போலும். (நிறைதல் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. பாழ் போகாது நெடிது நின்று எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவும் என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

உலகு அவாம் பேரறிவாளன் திரு - உலகிலுள்ள உயிர்களையெல்லாம் விரும்பி ஒப்புரவு செய்யும் பேரறிவுடையான் செல்வம்; ஊருணி நீர்நிறைந்த அற்றே - ஊர்வாழ்நரின் குடிநீர்க்குளம் நிரம்பினாற் போன்றதே. பாரி முல்லைக்குத் தேரும் பேகன் மயிலுக்குப் போர்வையும் உதவிய செயல்கள், ஒப்புரவாளர் அஃறினை யுயிர்களையும் விரும்புவதை அறிவிக்கும். ஊருண்பது ஊருணி. இது பாண்டி நாட்டு வழக்கு. இல்லற நிலையிலேயே இருதிணையுயிர்களிடத்தும் அன்பு செய்பவனைப் பேரறிவாளன் என்றார். ஊருணி என்ற உவமத்தால் மாபெரும் செல்வம் என்பதும் ஒப்புரவாளன் வாழுங் காலமெல்லாம் எல்லார்க்கும் என்றும் எளிதில் உதவும் என்பதும் பெறப்படும். ' நீர்நிறைதல் ' ஒரு சொற்றன்மையது. ஏகாரம் தேற்றம்.

மணக்குடவர்

ஊர் உண்கின்றகேணி நீர் நிறையப் புகுந்தாலொக்கும்: உலகத்தாரெல்லாராலும் நச்சப்படுகின்ற பெரிய வொப்புரவு அறிவானது செல்வம். இஃது ஒப்புரவறிவார்க்கு உளதாகிய செல்வம் நச்சிச்சென்றார் வேண்டியவாறு முகக்கலா மென்றது.

புலியூர்க் கேசிகன்

உலகினர் எல்லாரும் விரும்புமாறு, உதவி செய்து வாழும் பேரறிவாளனுடைய செல்வமானது, ஊருணியிலே நீர் நிரம்பினால் போலப் பலருக்கும் பயன்படுவதாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)ஒப்புரவறிதல் (Oppuravaridhal)