குறள் (Kural) - 214

குறள் (Kural) 214
குறள் #214
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

பொருள்
ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.

Tamil Transliteration
Oththa Tharavon Uyirvaazhvaan Matraiyaan
Seththaarul Vaikkap Patum.

மு.வரதராசனார்

ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.

சாலமன் பாப்பையா

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.

கலைஞர்

ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.

பரிமேலழகர்

உயிர் வாழ்வான் ஒத்தது அறிவான் - உயிரோடு கூடி வாழ்வானாவான் உலக நடையினை அறிந்து செய்வான், மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - அஃதறிந்து செய்யாதவன் உயிருடையானே யாயினும் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும்.(உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார். இதனான் உலகநடை வழு வேத நடை வழுப்போலத் தீர்திறன் உடைத்து அன்று என்பது கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் - ஒப்புரவு செய்வானும்செய்யாதானுமாகிய இருவகைச் செல்வருள், செய்பவனே உயிரோடு கூடி வாழ்பவனாவன்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - மற்றச் செய்யாதவன் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படுவான். உயிருக்குரிய அறிவுஞ் செயலுமின்மையின், நடைப்பிணமென்றுங் கருதப்படாது பிணமென்றே இழிந்திடப்படுவான் என்றார்.

மணக்குடவர்

ஒப்புரவறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப்படுவன். அஃதறியான் செத்தவருள் ஒருவனாக எண்ணப்படுவன். இஃது ஒப்புரவறியாதார் பிணத்தோ டொப்ப ரென்றது.

புலியூர்க் கேசிகன்

‘எவ்வுயிரும் ஒத்த தன்மையானது’ என்று அறிந்து உதவி செய்து வாழ்பவனே உயிர் வாழ்கின்றவன்; ஒப்புரவற்ற மற்றவன், செத்தவருள் வைத்துக் கருதப்படுவான்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)ஒப்புரவறிதல் (Oppuravaridhal)