குறள் (Kural) - 213
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
பொருள்
பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ``ஒப்புரவு'' என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது.
Tamil Transliteration
Puththe Lulakaththum Eentum Peralaridhe
Oppuravin Nalla Pira.
மு.வரதராசனார்
பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.
சாலமன் பாப்பையா
தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.
கலைஞர்
பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ஒப்புரவு என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது.
பரிமேலழகர்
புத்தேள் உலகத்தும் ஈண்டும் - தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும், ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது - ஒப்புரவுபோல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது. ( ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லோரும் ஒரு தன்மையராகலின் புத்தேள் உலகத்து அரிதாயிற்று, யாவர்க்கும் ஒப்பது இது போல் பிறிதொன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. 'பெறற்கரிது' என்று பாடம் ஓதி, 'பெறுதற்குக் காரணம் அரிது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
ஒப்புரவின் நல்ல-ஒப்புரவு போன்ற நல்ல செயல்களை; புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் - தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல்; அரிதே - அரிதேயாம். அரிது என்னும் சொல், தேவருலகத்தை நோக்கின் இன்மைப்பொருளும், இவ்வுலகத்தை நோக்கின் அருமைப் பொருளும், தருவதாம்.ஏனெனின், தேவருலகத்தில் ஈவாரும் ஏற்பாருமின்றி எல்லாரும் ஒரு தன்மையர்; இவ்வுலகத்தில் ஒப்புரவு செய்வார் விரல்விட்டெண்ணவும் வேண்டாத ஒரு சிலரே. ஏகாரம் தேற்றம். ' பிற ' அசைநிலை.
மணக்குடவர்
ஒப்புரவு செய்தலின் நன்றாயிருப்பது தேவருலகத்தினும் இவ்வுலகத்தினும் பெறுதற்கு அரிதாம்.
புலியூர்க் கேசிகன்
ஒப்புரவைப் போலப் பலருக்கும் நன்மையான வேறொரு பண்பை இவ்வுலகத்திலும், தேவர்களின் உலகத்திலும் பெறுவது அருமை ஆகும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | ஒப்புரவறிதல் (Oppuravaridhal) |