குறள் (Kural) - 212

குறள் (Kural) 212
குறள் #212
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

பொருள்
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.

Tamil Transliteration
Thaalaatrith Thandha Porulellaam Thakkaarkku
Velaanmai Seydhar Poruttu.

மு.வரதராசனார்

ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

சாலமன் பாப்பையா

முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.

கலைஞர்

தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.

பரிமேலழகர்

தக்கார்க்கு - தகுதி உடையார்க்கு ஆயின், தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் - முயல்தலைச் செய்து ஈட்டிய பொருள் முழுவதும், வேளாண்மை செய்தற் பொருட்டு - ஒப்புரவு செய்தற் பயத்தவாம். (பிறர்க்கு உதவாதார் போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் - ஒப்புரவாளன் முயற்சி செய்து தொகுத்த செல்வம் முழுதும்; தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு - தகுதியுடையார்க்குப் பல்வகையிலும் உதவி செய்தற் பொருட்டேயாம். இதனால், இடைவிடாது முயற்சி செய்து மேன்மேலும் பொருளீட்டாது இருந்துண்ணும் சோம்பேறித்தனமும், தகுதியில்லாதவர்க்குச் செய்யும் தவறான வேளாண்மையும் விலக்கப்பட்டன. குந்தித் தின்றாற் குன்றுங் குன்றும். ஆதலின், ஒப்புரவாளனுக்கு இடைவிடா முயற்சி வேண்டுமென்பதாம். பொருளுள்ளவரும் தமிழைக்கெடுப்பவரும் தகுதியற்றவராவர். ஒப்புரவாளன் என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்தது.

மணக்குடவர்

ஒருவன் முயன்று ஈட்டிய பொருளெல்லாம் தகுதி யுடையார்க்கு உபகரித்தற்காகவாம். இது பொருளுண்டானால் ஒப்புரவு செய்கவென்றது.

புலியூர்க் கேசிகன்

தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)ஒப்புரவறிதல் (Oppuravaridhal)