குறள் (Kural) - 211

குறள் (Kural) 211
குறள் #211
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.

பொருள்
கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.

Tamil Transliteration
Kaimmaaru Ventaa Katappaatu Maarimaattu
En Aatrung Kollo Ulaku.

மு.வரதராசனார்

இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.

சாலமன் பாப்பையா

பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?.

கலைஞர்

கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.

பரிமேலழகர்

மாரிமாட்டு உலகு என் ஆற்றும் - தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யா நின்றன, கடப்பாடு கைம்மாறு வேண்டா - ஆகலான், அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல. ('என் ஆற்றும்?' என்ற வினா, 'யாதும் ஆற்றா' என்பது தோன்ற நிற்றலின், அது வருவித்துரைக்கப்படும். தவிரும் தன்மைய அல்ல என்பது 'கடப்பாடு' என்னும் பெயரானே பெறப்பட்டது. செய்வாராது வேண்டாமையைச் செய்யப்படுவனமேல் ஏற்றினார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

உலகு மாரிமாட்டு என் ஆற்றும் - உலகிலுள்ள உயிர்கள் தம் வாழ்க்கைக்கு இன்றியமையாத நீரை யுதவுகின்ற முகிலுக்கு என்ன கைம்மாறு செய்கின்றன! ; ஒன்றுமில்லையே !கடப்பாடு கைம்மாறு வேண்டா - ஆதலால், அம்முகில் போலும் வள்ளல்கள் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு வேண்டுவனவல்ல. 'என்னாற்றும் ' என்ற வினாவிற்குரிய விடை வருவித்துரைக்கப்பட்டது ' கடப்பாடு ' என்னுஞ் சொல் பெருஞ் செல்வர் வறியார்க்குதவக் கடமைப்பட்டவர் என்பதை யுணர்த்தும். கடப்படுவது கடப்பாடு. இனி, வள்ளல்கள் தம் கடமையாகக் கொண்டொழுகுவது கடப்பாடு எனினுமாம். "பாரி பாரி யென்றுபல வேத்தி யொருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி யொருவனு மல்லன் மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே". என்னும் கபிலர் பாட்டு (புறம் 107) இங்குக் கவனிக்கத்தக்கது. செய்வாரது வேண்டாமை அவர் செயலின்மேல் ஏற்றப்பட்டது. ' கொல் ' , ' ஓ ' இரண்டும் அசைநிலைகள்.

மணக்குடவர்

ஒப்புரவு செய்யுங்காற் கைம்மாறு கருதிச் செய்ய வேண்டா: எல்லார்க்கும் நல்வழி சுரக்கின்ற மாரிக்கு உலகம் கைம்மாறு செய்தலுண்டோ? கடப்பாடு- ஒப்புரவு. இஃது ஒப்புரவாவது கைம்மாறு வேண்டாத கொடை யென்று கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

மழைக்கு இவ்வுலகம் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? உலக நன்மையைக் கருதிச் சான்றோர் செய்யும் கடமைகளும் அவ்வாறே, கைம்மாறு விரும்பாதவைகளே!

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)ஒப்புரவறிதல் (Oppuravaridhal)