குறள் (Kural) - 210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
பொருள்
வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.
Tamil Transliteration
Arungetan Enpadhu Arika Marungotith
Theevinai Seyyaan Enin.
மு.வரதராசனார்
ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
சாலமன் பாப்பையா
தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.
கலைஞர்
வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.
பரிமேலழகர்
மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின் - ஒருவன் செந்நெறிக் கண் செல்லாது கொடுநெறிக்கண் சென்று பிறர்மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின், அருங்கேடன் என்பது அறிக - அவன் அரிதாகிய கேட்டையுடையவன் என்பது அறிக. (அருமை: இன்மை.. அருங்கேடன் என்பதனை, 'சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில் என்றூழ் வியன்குளம்' (அகநா.42) என்பது போலக் கொள்க. 'ஓடி' என்னும் வினையெச்சம் 'செய்யான்' என்னும் எதிர்மறை வினையின் செய்தலோடு முடிந்தது. இதனால் தீவினை செய்யாதவன் கேடிலன் என்பது கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
மருங்கு ஓடித்தீவினை செய்யான் எனின் - ஒருவன் செந்நெறியினின்றும் ஒரு பக்கமாக விலகிச் சென்று பிறர்க்குத் தீமை செய்யானாயின்; அருங்கேடன் என்பது அறிக - அவன் கேடில்லாதவன் என்பதை அறிந்து கொள்க. அருமை இங்கு இன்மை குறித்தது. அருங் கேடன் என்பது காலில்லாதவனை இல்லாக் காலன் என்றாற் போல்வது. இது செய்யுள் வழக்கு. மருங்கோடுதல் விரைந்து விலகுதல்.
மணக்குடவர்
ஒருமருங்கு ஓடிப் பிறர்க்குத்தீவினைகளைச் செய்யானாயின் தனக்குக் கேடுவருவ தில்லை யென்று தானே யறிக. இது கேடில்லை யென்றது.
புலியூர்க் கேசிகன்
ஒருவன், தவறான வழியிலே சென்று தீய செயல்களைச் செய்யாதிருப்பானானால், அவன் கேடற்றவன் ஆவான் என்று தெளிவாக அறியலாம்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | தீவினையச்சம் (Theevinaiyachcham) |