குறள் (Kural) - 209
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
பொருள்
தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.
Tamil Transliteration
Thannaiththaan Kaadhala Naayin Enaiththondrum
Thunnarka Theevinaip Paal.
மு.வரதராசனார்
ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.
சாலமன் பாப்பையா
தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.
கலைஞர்
தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.
பரிமேலழகர்
தன்னைத் தான் காதலன் ஆயின் - ஒருவன் தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின், தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க - தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், தீவினைப் பால் என்றார். பிறர்மாட்டுச் செய்த தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார் ஆகலின், 'தன்னைத்தான் காதலன் ஆயின்' என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
தான் தன்னைக் காதலன் ஆயின்-ஒருவன் உண்மையில் தன்னைக் காதலிப்பவனாயின்; தீவினைப் பால் எனைத்து ஒன்றும் துன்னற்க-பிறர்க்குத் தீமை செய்யும் பகுதியொடு எத்துணைச் சிறிதும் பொருந்தற்க. பிறர்க்குச் செய்த தீவினை தப்பாது தனக்குத் துன்பம் விளைத்தலால், 'தன்னைத்தான் காதலனாயின்' என்றார். காதல் என்றது அறிவோடு கூடிய காதலை. தீவினைப் பகுதியொடு பொருந்தாமையாவது தீவினை செய்யாதிருத்தலே. ஒன்று என்னும் எண்ணுப் பெயர் இங்குச் சிறிதளவுப் பொருளினது.
மணக்குடவர்
தனக்குத் தான் நல்லவனாயின், யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக. இது தீவினைக்கு அஞ்சவேண்டுமென்றது.
புலியூர்க் கேசிகன்
ஒருவன், தன்னைத் தான் விரும்பி வாழ்பவனானால், அவன் எத்தகையதொரு தீய செயல்களிலும் ஒருபோதுமே ஈடுபடாமல் இருப்பானாக!
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | தீவினையச்சம் (Theevinaiyachcham) |