குறள் (Kural) - 208

குறள் (Kural) 208
குறள் #208
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று.

பொருள்
ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.

Tamil Transliteration
Theeyavai Seydhaar Ketudhal Nizhaldhannai
Veeyaadhu Atiurain Thatru.

மு.வரதராசனார்

தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

சாலமன் பாப்பையா

பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.

கலைஞர்

ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈ.டுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.

பரிமேலழகர்

தீயவை செய்தார் கெடுதல் - பிறர்க்குத் தீவினை செய்தார் தாம் கெடுதல் எத்தன்மைத்து எனின், நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று - ஒருவன் நிழல் நெடிதாகப் போயும், அவன்றன்னை விடாது வந்து அடியின்கண் தங்கியதன்மைத்து. (இவ்வுவமையைத் தன் காலம் வருந்துணையும் புலனாகாது உயிரைப்பற்றி நின்று அது வந்துழி உருப்பதாய தீவினையைச் செய்தார், பின் அதனால் கெடுதற்கு உவமையாக்கி உரைப்பாரும் உளர். அஃது உரை அன்று என்பதற்கு அடி உறைந்த நிழல் தன்னை வீந்தற்று என்னாது, வீயாது அடி உறைந்தற்று என்ற பாடமே கரியாயிற்று. மேல் 'வீயாது பின் சென்று அடும்' என்றார்.ஈண்டு அதனை உவமையான் விளக்கினார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பிறர்க்குத் தீமையான வற்றைச் செய்தவர் அவற்றின் விளைவால் தப்பாது கெடுதல் எது போன்றதெனின்; நிழல் தன்னை வீயாது அடி உறைந்த அற்று- ஒருவனது நிழல் அவன் எங்குச் செல்லினும் உடன் சென்று, இருள் வந்த விடத்துக்கண்ணிற்கு மறையினும் மீண்டும் ஒளியில் தோன்றுமாறு, என்றும் அவனை விட்டு நீங்காது அவன் காலடியிலேயே தங்கியதன்மையது. மேல் 'வீயாது பின்சென் றடும்' என்றதை இங்கு உவமையால் விளக்கினார்.

மணக்குடவர்

தீயவானவற்றைப் பிறர்க்குச் செய்தார் கெடுதல், நிழல் தன்னை நீங்காதே உள்ளடியின்கீழ் ஒதுங்கினாற் போலும். மேல் வினைப்பகை பின் சென்றடுமென்றார் அஃதடுமாறு காட்டினார்.

புலியூர்க் கேசிகன்

தீய செயல்களைச் செய்தவர் கெடுதல் உறுதி என்பது, நிழல் தன்னை விடாமல் வந்து தன் காலடியிலேயே தங்கி இருத்தலைப் போன்றதாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)தீவினையச்சம் (Theevinaiyachcham)