குறள் (Kural) - 207

குறள் (Kural) 207
குறள் #207
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.

பொருள்
ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.

Tamil Transliteration
Enaippakai Yutraarum Uyvar Vinaippakai
Veeyaadhu Pinsendru Atum.

மு.வரதராசனார்

எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.

சாலமன் பாப்பையா

எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.

கலைஞர்

ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.

பரிமேலழகர்

எனைப்பகை உற்றாரும் உய்வர் - எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர், வினைப்பகை வீயாது பின் சென்று அடும் - அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும் ('வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை.' (புறநா.363) என்புழியும் வீயாமை நீங்காமைக்கண் வந்தது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

எனைப் பகை உற்றாரும் உய்வர்-எத்துணைப் பெரிய பகையுடையாரும் அதனின்று ஒருவகையால் தப்புவர்; வினைப்பகை வீயாது பின் சென்று அடும்-ஆயின், தீவினையாகிய பகையோ நீங்காது தொடர்ந்து சென்றவிடமெல்லாஞ் சென்று வருத்தும். தீவினைப் பயனுக்குத் தப்ப முடியாதென்பதாம்.

மணக்குடவர்

எல்லாப்பகையும் உற்றார்க்கும் உய்தியுண்டாம்; தீவினை யாகிய பகை நீங்காது என்றும் புக்குழிப் புகுந்து கொல்லும். அஃதாமாறு பின் கூறப்படும்.

புலியூர்க் கேசிகன்

எத்தகைய பகைமை உடையவரும் தப்பிப் பிழைப்பர்; தீவினையாகிய பகையோ, ஒருவனை விடாமல் பின்பற்றிச் சென்று துன்பத்தைச் செய்யும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)தீவினையச்சம் (Theevinaiyachcham)