குறள் (Kural) - 206

குறள் (Kural) 206
குறள் #206
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

பொருள்
வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.

Tamil Transliteration
Theeppaala Thaanpirarkan Seyyarka Noippaala
Thannai Atalventaa Thaan.

மு.வரதராசனார்

துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா

துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.

கலைஞர்

வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.

பரிமேலழகர்

நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான் - துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை வேண்டாதவன், தீப்பால தான் பிறர்கண் செய்யற்க - தீமைக்கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (செய்யின் அப்பாவங்கள் அடுதல் ஒருதலை என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான்-துன்புறுத்துந் திறத்தனவாகிய குற்றங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை விரும்பாதவன்; தீப்பால தான் பிறர்கண் செய்யற்க-தீமை செய்யுந் திறத்தனவாகிய வினைகளைத் தான் பிறரிடத்துச் செய்யாதிருக்க. தன்னலம் பற்றியேனும் பிறர்க்குத் தீமை செய்யாதிருக்க என்றவாறு.

மணக்குடவர்

தன்னைத் துன்பப்பகுதியானவை நலிதல் வேண்டாதவன் தீமையாயினவற்றைத் தான் பிறர்க்குச் செய்யதா தொழிக. இது நோயுண்டாமென்றது.

புலியூர்க் கேசிகன்

துன்பம் தருவனவான தீவினைகள் தன்னைத் தொடர்ந்து வருத்துதலை விரும்பாதவன், தீய செயல்களைத் தான் பிறரிடம் ஒரு போதும் செய்யாதிருப்பானாக

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)தீவினையச்சம் (Theevinaiyachcham)